பார்களில் காலி மதுபாட்டில் சேகரிப்புக்கான டாஸ்மாக் நிறுவனத்தின் டெண்டர் செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மதுபான பார்களில் காலி மதுபாட்டில் சேகரிப்பு, தின் பண்டங்கள் விற்பனைக்கான டெண்டர் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வனப்பாதுகாப்பு வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், காலி மது பாட்டில்கள் விவசாய நிலம், நீர் நிலைகள், குப்பைத் தொட்டிகள், திறந்தவெளி நிலம், பாசன கால்வாய்களில் வீசப்படுவதை தடுக்கும் வகையில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்றுவிட்டு காலி பாட்டிலை திரும்ப கொடுத்தால் அதை திரும்ப கொடுக்கலாம் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை ஒட்டிய பார்களுக்கான டெண்டர் கோரப்பட்டதில் காலி மதுபாட்டில் சேகரிப்பு மற்றும் தின் பண்டங்கள் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதைஎதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. டாஸ்மாக் மதுபான கடைகளால் திரும்பப் பெறப்பட்ட காலி மதுபாட்டில்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்குகள், நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, வழக்கறிஞர்கள் அருண் அன்புமணி, ஆர்.சந்திரசேகரன் ஆகியோரும், அரசு தரப்பில் அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், கே.சதீஷ்குமார் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.மனுதாரர்கள் தரப்பில், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு முரணாக டெண்டர் அமைந்துள்ளது. மதுபான கடைகளில் இருந்து பாட்டில்களை வாங்க தங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள நிலையில் பார் இல்லாத இடங்களிலும் புதிய டெண்டர் கோரப்பட்டதால் தங்கள் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது என்று வாதிடப்பட்டது.

அரசு தரப்பில், மதுபான கடைகளில் திரும்பப்பெறப்பட்ட பாட்டில்களை கொள்முதல் செய்யவே மனுதாரர்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பார்களில் விட்டு செல்லப்படும் பாட்டில்களுக்கு உரிமை கோர முடியாது என்று வாதிடப்பட்டது.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பார்களுக்கான புதிய டெண்டர் அறிவிக்கப்பட்டாலும், மதுபான கடைகளில் திரும்பப்பெறப்படும் பாட்டில்கள் மனுதாரர்களுக்குதான் கிடைக்கும் என்பதால் டெண்டர் செல்லும். அரசு டெண்டர் நடைமுறைகளை தொடரலாம்.

எதிர்காலத்தில் தமிழ்நாடு அரசு முழு மதுவிலக்கை அமல்படுத்த முடிவு செய்தால் மனுதாரர்கள் நியாயமான எதிர்பார்ப்பு என்று உரிமை கோர முடியாது. குடி என்னும் தீய பழக்கத்திற்கு மக்கள் ஆளாக வேண்டும், அதன் மூலம் வருமானம் ஈட்டவேண்டும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. பார்களில் சேகரிக்கப்படும் காலி மதுபாட்டில்களை திரும்பக் கொடுக்கும்போது, அதற்கான 10 ரூபாய் ரொக்கமாக கொடுக்கப்படுகிறது. இனிமேல் பாரின் வங்கி கணக்கில் செலுத்த அரசுக்கு உத்தரவிட்டனர்.

Related posts

தமிழ்நாட்டுக்கு மஞ்சள் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலையை 8 ஆண்டுகளாக கிடப்பில் போட்ட ஒன்றிய அரசு: டெல்டா மாவட்டத்துக்கு செல்லும் மக்கள் தவிப்பு

2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற 95 ரன்கள் இலக்கு