இடமாறுதலுக்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் டாஸ்மாக் மேலாளர், உதவியாளர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

திருவாரூர்: இடமாறுதலுக்கு விற்பனையாளரிடம் ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாவட்ட டாஸ்மாக் மேலாளர், உதவியாளரை திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா குன்னலூரை சேர்ந்தவர் சிவதாஸ் (45). மன்னார்குடி தாலுகா ஆலங்கோட்டை டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ளார். இவர் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் வீடு அருகே வேறொரு கடைக்கு பணி மாறுதல் செய்து கொடுக்குமாறு மாவட்ட மேலாளர் சக்திபிரேம்சந்தரிடம் 2 மாதங்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார்.

அதற்கு ரூ.1லட்சத்து 10 ஆயிரம் லஞ்சம் தரும்படி அவர் கேட்டுள்ளார். இந்நிலையில் 3 தவனைகளாக ரூ.70 ஆயிரம் சிவதாஸ் கொடுத்துள்ளதாக தெரிகிறது. மீதமுள்ள ரூ.40 ஆயிரத்தை தன்னால் கொடுக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். அதற்கு சக்திபிரேம்சந்தர், முழு தொகை கொடுத்தால் மட்டுமே மாறுதல் செய்ய முடியும் என கூறி விட்டாராம். இதுதொடர்பாக சிவதாஸ், திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் நேற்றுமுன்தினம் புகார் கொடுத்தார்.

அவர்களது ஆலோசனை பேரில் ரசாயனம் தடவிய ரூ.40ஆயிரத்துடன் நேற்று மன்னார்குடி சாலை விளமல் பகுதியில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு சிவதாஸ் சென்றார். அங்கிருந்த உதவியாளர் சரவணனிடம், கொடுத்தபோது மறைந்திருந்த போலீசார் சரவணனை பிடித்து விசாரணை நடத்தினர். அவர், மாவட்ட மேலாளர் தான் பணத்தை வாங்கி வைக்கும்படி கூறினார். இதனையடுத்து போலீசார், மாவட்ட மேலாளர் சக்திபிரேம்சந்தர் (55) மற்றும் உதவியாளர் சரவணன் (45) ஆகியோரை கைது செய்தனர்.

* சர்ச்சையில் சிக்கியவர்
சென்னை ராயபுரத்தை சேர்ந்தவரான சக்திபிரேம்சந்தர், 4 வருடத்திற்கும் மேலாக திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளராக பணியாற்றி வரும் நிலையில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார். கடந்த 8ம் தேதி திருத்துறைப்பூண்டியை சேர்ந்த டாஸ்மாக் கடை விற்பனையாளர் பாபு திடீரென வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது சாவுக்கு காரணம் மாவட்ட மேலாளர் சக்திபிரேம்சந்தர் தான் என கடிதம் எழுதி வைத்திருந்தார்.

Related posts

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

மாநில ஜூனியர் தடகள போட்டி நாளை தொடக்கம்

மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்!