ஏப்ரல் 1 முதல் சுங்க கட்டணம் உயர்வு அத்தியாவசிய பொருட்கள் விலை உயர வழிவகுக்கும்: உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தல்

சென்னை: சுங்கக்கட்டணம் ஏப்ரல் 1 முதல் உயர்த்தப்படும் என்ற அறிவுப்புக்கு கண்டனம் எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டம் கல்லக்குடி, அரியலூர் மாவட்டம் மணகெதி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம் கரியந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய 5 சுங்கச்சாவடிகளில் வருகிற ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் வாகனங்களின் வகைக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் உயர வாய்ப்புள்ளது. இந்த கட்டண உயர்வால் காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது. இதனால் சுங்கக்கட்டண உயர்வுக்கு அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சுங்கக்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று அரசியல் கட்சியினர், அனைத்து தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆர்.முனிரத்தினம் கூறியதாவது: சுங்கச்சாவடி கட்டணம் உயர்வால் வாகனங்களுக்கான வாடகை உயரக்கூடும். இதன் தாக்கம் அத்தியாவசிய பொருட்களின் மீது தான் விழும். அவற்றின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக சாமானிய மக்களின் வீடு கட்டும் செலவு, வணிக கட்டுமானங்களின் செலவு அதிகரிப்பதை தவிர்க்க முடியாது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. ஏற்கனவே எம்சாண்ட், ஆற்றுமணல் உள்ளிட்ட பொருட்களை சென்னைக்கு எடுத்து வரும்போது ஆண்டுக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சுங்கவரியாக செலுத்த வேண்டியிருக்கிறது. இந்நிலையில் மேலும் சுங்க வரி உயர்வு எங்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தேர்தல் அறிக்கையில் சுங்கச்சாவடிகள் முழுவதும் அகற்றப்படும் என்று அறிவித்துள்ளார். இதனை வரவேற்கிறோம் என்றார்.

 

Related posts

கள்ளச்சாராயம் விற்பனை; அதிக வழக்குகள் பதிவாகும் மாவட்டங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கலாம்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு