ரூ.30.50 கோடியில் 55,000 சதுர அடியில் மூன்று தளங்களுடன் தஞ்சையில் மினி டைடல் பூங்கா அடுத்த மாதம் திறப்பு: 1000 பேருக்கு வேலைவாய்ப்பு டெல்டா மாவட்டங்களுக்கு வரப்பிரசாதம்

தஞ்சாவூர்: தஞ்சையில் மூன்று தளங்களுடன் 55,000 சதுர அடியில், ரூ.30.50 கோடியில் மினி டைடல் பூங்கா அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது. இது டெல்டா மாவட்டத்தை சேர்ந்த 1,000 இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. தமிழகம் தகவல் தொழில்நுட்ப துறையில் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் டைடல் பார்க் எனப்படும் டைடல் பூங்கா. திமுக ஆட்சி காலத்தில் கலைஞர் முதல்வராக இருந்த போது, சென்னை தரமணி ராஜீவ் காந்தி சாலையில் 2000ம் ஆண்டில் டைடல் பார்க் திறக்கப்பட்டது.

இது ஆசியாவில் உள்ள மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப கட்டிடங்களில் ஒன்றாகும். இக்கட்டிடம், 1,19,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது தமிழகம் ஐடி துறையில் மாபெரும் வளர்ச்சி அடைய வித்திட்டது. சென்னைக்கு அடுத்த படியாக கோவையில் ஐடி நிறுவனங்கள் நிறுவ போட்டி உள்ளதால் அங்கு பிரமாண்ட ஐடி பார்க் தயாராகி வருகிறது. இதேபோல் தமிழகத்தின் மைய பகுதியான திருச்சி மற்றும் தென்மாவட்ட தலைநகராக கருதப்படும் மதுரையிலும் பிரமாண்ட ஐடி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தொழில் வளச்சியை மேம்படுத்தவும், அந்தந்த பகுதியிலே வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் ஐடி துறையின் சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் பரவலாக விரிவுபடுத்தும் வகையில் தற்போது இரண்டாம்நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் 50,000 சதுர அடி முதல் 1 லட்சம் சதுர அடி பரப்பு வரை பல்வேறு இடங்களில் மினி டைடல் பூங்காக்களை தமிழ்நாடு அரசு அமைத்து வருகிறது. இவற்றை டைடல் பார்க் நிறுவனம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்துடன் இணைந்து டைடல் நியோ என்ற சிறப்பு நோக்க நிறுவனம் மூலமாக பல்வேறு நகரங்களில் அமைத்து வருகின்றன.

அதன்படி, தஞ்சாவூரில் மினி டைடல் பூங்கா கட்டுமான பணியை கடந்த ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். புதிய பஸ் நிலையம் அருகே மேலவஸ்தாசாவடியில் 3.40 ஏக்கரில் ரூ.30.50 கோடி மதிப்பில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 55,000 சதுர அடியில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் 95 சதவீதம் முடிந்துள்ளது. இந்த மினி டைடல் பூங்கா அடுத்த மாதம் 5ம்தேதி திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுபற்றி தஞ்சை ஐடி நிலைய வட்டாரத்தில் விசாரித்த போது, ‘டெல்டா மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் சென்னை, பெங்களூரு, மும்பையில் ஐடி துறைகளில் வேலை பார்க்கின்றனர். தஞ்சையில் டைடல் பார்க் திறக்கப்பட்டால், அவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இந்த பூங்காவில் இரு நிறுவனங்கள் தொடங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 நிறுவனங்கள் வர உள்ளன.

இதன்மூலம் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த 1,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதே போல் டெல்டா மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளின் படித்த பிள்ளைகள் கூட வேலைவாய்ப்பு பெறுவார்கள். இந்த ஐடி பார்க்கால் டெல்டாவில் தொழில்புரட்சி ஏற்படும். திறப்பு விழாவுக்கு முன்பே நிறுவனங்கள் முழுமையாக வந்து விடும். மேலும், நிறுவனங்கள் முன்வந்தால் அருகிலுள்ள இடத்தில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட வாய்ப்பு உள்ளது’ என்றனர்.

Related posts

டெல்லி அளவிற்கு லடாக்கில் ஆக்கிரமிப்பு; மோடியால் சீனாவை சரியாக கையாள முடியவில்லை: அமெரிக்காவில் ராகுல் கடும் குற்றச்சாட்டு

திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

நெல்லையப்பர் கோயிலில் இருந்து மானூருக்கு புறப்பட்டு சென்றார் கருவூர் சித்தர்: நாளை சுவாமி காட்சி கொடுக்கும் நிகழ்வு