தஞ்சையில் ₹50 லட்சத்தில் ‘குந்தவை நீச்சல் குளம்’ சீரமைப்பு பணி

*விரைவுந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

தஞ்சாவூர் : தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் பணிகளை விரைந்து முடித்து நீச்சல் வீரர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சாவூர் ‘அன்னை சத்யா விளையாட்டு அரங்கம்’ தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ளது. இங்கு, ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், வாலிபால் மைதானம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

மேலும், இங்கு நவீன உள் விளையாட்டரங்கம், டென்னிஸ் அரங்கம், இறகுப்பந்து மைதானம், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவை உள்ளன. இது தவிர, நவீன சிந்தடிக் ஓடுதளம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இங்கு, கைப்பந்து விளையாட்டு விடுதியும் உள்ளது. இதில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த விளையாட்டு அரங்கத்தில் ‘குந்தவை நீச்சல் குளம்’ உள்ளது. இந்த குளத்தை நவீன முறையில் புனரமைக்க வேண்டும் என்று விளையாட்டு மற்றும் நீச்சல் வீரர்கள் சார்பில் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, 25 மீட்டர் நீளமும் 13 மீட்டர் அகலமும், ஒருபுறம் இரண்டரை அடி ஆழமும், மறுபுறம் ஐந்தரை அடி ஆழமும் கொண்ட இந்த நீச்சல் குளத்தை நவீன முறையில் புனரமைத்து சர்வதேச அளவில் மிகப்பெரிய உலகத்தரம் வாய்ந்த நீச்சல் குளமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இந்த நீச்சல் குளத்தின் தரை தளத்தை சீரமைப்பதோடு, சுற்றிலும் பக்கவாட்டை உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.50 லட்சம் செலவில் இந்த குளத்தை சர்வதேச அளவிலான நீச்சல் குளமாக தரம் உயர்த்தும் பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது.

அதில், ஒருபுறம் இரண்டரை அடி ஆழத்தை 3 அடியாகவும், மறுபுறம் 5அடி ஆழத்தை, ஐந்தரை அடியாகவும் அதிகரித்து பணிகள் நிறைவுபெற்றுள்ளன. தற்போது, நீச்சல் குளத்தின் தரைதளத்தில் டைல்ஸ் பதிக்கப்பட்டு, பக்கவாட்டிலும் உயர்த்தப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும், நீச்சல் குளத்திற்குள் இறங்குவதற்கான படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் மற்றும் நான்கு புறமும் தண்ணீர் வழிந்தோடுவதற்கான வசதி உள்ளிட்ட பணிகள் மட்டுமே நடைபெற வேண்டி உள்ளது.

75 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்னும் 25 சதவீத பணிகள் நடைபெற வேண்டும்.கடந்த 5 மாதங்களுக்கு மேலாக நடந்துவரும் பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என வீரர், வீராங்கனைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு