தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகம்

நூலகங்கள் நிகரற்ற கலாசாரக் களஞ்சியங்களாகவும், அறிவுப் பொக்கிஷங்களாகவும் உள்ளன. அவை மக்களுக்கும் வெளியுலகிற்கும் இடையிலான பாலம். நீங்கள் தஞ்சாவூர் சென்றால், ஆசியாவிலேயே பழமையான நூலகங்களில் ஒன்றான சரஸ்வதி மஹால் நூலகத்தையும், தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நூலகத்தையும் கட்டாயம் பார்க்க வேண்டும்.சரசுவதி மகால் தமிழ்நாட்டின் தஞ்சாவூரின் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள ஒரு நூலகம் ஆகும். இது உலகில் உள்ள தொன்மையான நூலகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.சுமார் 617 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சோழர்கள் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டு அவர்களின் பணியால் வளர்ச்சியடைந்து, பின்னர் தஞ்சை நாயக்க மன்னர்களால் மேம்படுத்தப்பட்டு அதன் பின்னர் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களால் வளர்ச்சியுற்று, இன்று பன்மொழிச் சுவடிகளும், காகிதத்தில் எழுதிய நூல்களும், ஓவியங்களும் கொண்ட ஓர் ஒப்பற்ற நூலகமாகத் திகழ்கின்றது.

கல்வெட்டில் கிடைத்துள்ள ஆதாரங்களின்படி (ARE 168, 169, 1961-62) இந்நூலகம் முதலில் சரசுவதி பண்டாரகம், புத்தகப்பண்டாரகம் எனவும் இந்நூலகத்தில் பணிபுரிந்தவர்கள் சரசுவதி பண்டாரிகள் எனவும் வழங்கப்பட்டுள்ளனர். இங்கு தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், லத்தீன், கிரேக்கம் போன்ற பல மொழிகளிலுள்ள ஓலைச்சுவடிகளும், கையெழுத்துப் பிரதிகளும், அச்சுப் பிரதிகளும் உள்ளன. வரலாறு, மருத்துவம், அறிவியல், இசை, நாட்டியம், சிற்பம், மதம், தத்துவம் உள்ளிட்ட பல கலைகளில் சிறந்த நூல்கள் உள்ளன. 16, 17ம் நூற்றாண்டுகளில் தஞ்சையை ஆண்ட நாயக்க அரசர்கள் சமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ்நூல்களை கொண்டு வந்து சேர்த்தனர்.

தஞ்சாவூர் மராத்திய அரசர்கள் மேலும் பல நூல்களைச் சேர்த்து நூல்நிலையமாக மாற்ற, ஊக்கத்தோடு செயல்பட்டனர். அதில் தலைசிறந்தவர் இரண்டாம் சரபோஜி ஆவார். இரண்டாம் சரபோஜி 1820ம் ஆண்டு காசிக்குச் சென்றபோது, ஏராளமான சமஸ்கிருத நூல்களை கொண்டு வந்து சேர்த்தார். மேலும், இவர் காலத்தில், மேனாட்டு மொழியிலான 5000 அச்சுப்புத்தகங்களும், பல சிறந்த ஓவியங்களும் சேர்க்கப்பட்டன. ஆகையால் தான், இந்நூலகம் சரபோஜி சரசுவதி மகால் நூல்நிலையம் என்று வழங்கப்பெறுகிறது.இந்நூலகத்திற்கு வெளியே கொலுமண்டபமாக இருந்த ஒரு மண்டபத்திலே,1807ல் கிழக்கிந்தியக் கம்பெனியாரால் நிறுவப்பெற்ற சரபோஜி மன்னரின் உருவச்சிலை அழகாக அமைந்துள்ளது.

1871ல் அரசாங்கத்தார் நூல் நிலையத்திலுள்ள நூல்களின் பட்டியலொன்றைத் தயாரிக்குமாறு இடாக்டர் பரனெல் என்னும் நீதிபதிக்குப் பணித்தனர். அவர் இந்த நூல் நிலையமே உலகம் முழுவதிலும் மிகப் பெரியதும் மிக முக்கியமானதுமாகும் என்று கூறினார்.1918ல் தஞ்சை மராட்டிய மன்னரின் சந்ததியர், தமது சொந்த உடைமையாக்கி, இந்நூலகத்தை அரசாங்கத்திடம் ஒப்படைத்தனர். அதன்பின் சம்புநாதப்பட்டு இலாண்டகே, காகல்கர், பதங்க அவதூதர் முதலிய பல சிறந்த அறிஞர்களின் பரம்பரையிலிருந்து ஏராளமான நூற்றொகுதிகள் இந்நூலகத்தில் சேர்க்கப்பட்டன. இப்போது தமிழ்நாடு அரசால் மேலாண்மை செய்யப்படுகிறது. இங்கு ஏறத்தாழ 25,000 சமஸ்கிருத நூல்கள், பதினொரு இந்திய மொழிகளில் உள்ளன. வரலாற்றுப் புகழ்வாய்ந்த கையெழுத்தாலான அஞ்சல் மடல்களும், அவற்றுடன் படங்களும், இருக்கின்றன.400 ஆண்டுகளுக்கு முன்னிருந்த நந்திநாகரி என்னும் எழுத்தில் உள்ள சுவடிகள் உள்ளன. 300 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சீவக சிந்தாமணி, திருவாசகம், திவாகரம், கலிங்கத்துப்பரணி, கம்பராமாயணம், திருக்குறள் போன்ற நூல்களும் உள்ளன.

 

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்