மாணவர்களுக்கு மாதம் ரூ1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் 9ம் தேதி கோவையில் தொடங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தை வருகிற 9ம் தேதி கோவையில் தொடங்கி வைக்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, கொளத்தூர் எவர்வின் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தக பைகள் வழங்கி பேசியதாவது: தமிழ்நாடு முழுக்க சுற்றிக் கொண்டிருந்தாலும், எவ்வளவு வேலைகள் இருந்தாலும் முடிந்த அளவுக்கு பத்து நாட்களுக்கு ஒரு முறையோ, வாரத்துக்கு ஒரு முறையோ கொளத்தூருக்கு வந்து விடுகிறேன். கொளத்தூருக்கு வந்தாலே ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. எனக்காக கொளத்தூரை பாதுகாக்க கூடியவராக அமைச்சர் சேகர்பாபு இருந்து கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளும் என்னுடைய தொகுதிகள்தான். இருந்தாலும் கொளத்தூர் தொகுதியை பொருத்தவரைக்கும், நம்முடைய பணிகளால் ஒரு முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். அந்த அடிப்படையில் கொளத்தூர் தொகுதியில் புதிய வட்டாட்சியர் அலுவலகம், புதிய காவல் துணை ஆணையாளர் அலுவலகம், புதிய காவல் நிலையம், புதிய தீயணைப்பு நிலையம், புதிய சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவை விரைவில் அமைய இருக்கிறது. இது கொளத்தூர் தொகுதிக்கு மட்டும் இல்லை, தமிழ்நாட்டின் பல தொகுதிகளுக்கு வர இருக்கிறது. ஆளுங்கட்சி மட்டுமல்ல, எதிர்க்கட்சி மட்டுமல்ல, அனைத்து 234 தொகுதிகளிலும் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் அவசரமாக உங்கள் தொகுதிக்கு முதற்கட்டமாக 10 திட்டங்களை கொடுங்கள்.

அந்த 10 திட்டங்களில் எதை உடனடியாக நிறைவேற்ற முடியுமோ இந்த ஆண்டிற்குள் நிறைவேற்றி தருகிறோம் என்று சொல்லி, அதை அறிவித்து, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கி அந்த பணியை செய்து கொண்டிருக்கிறோம். எந்த விருப்பு வெறுப்பும் இல்லாமல் எதிர்க்கட்சியினர் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளுக்கு கூட முக்கியத்துவம் தந்து, திட்டங்களை எல்லாம் வரிசைப்படுத்தி, முறைப்படுத்தி, விரைவுப்படுத்தி செயல்படுத்திக் கொண்டிருக்கக் கூடிய ஆட்சிதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி. இந்த ஆட்சி திமுகவுக்கு ஓட்டு போட்ட மக்களுக்காக மட்டுமல்ல, ஓட்டுப் போட தவறியவர்களுக்கும் சேர்த்து, அதாவது ஓட்டு போட்டவர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். ஓட்டுப் போடாதவர்கள் ஐய்யய்யோ, இப்படிப்பட்ட ஆட்சிக்கு போடாமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்படக்கூடிய அளவிற்கு எங்கள் ஆட்சி இருக்கும் என்று முன்பு சொன்னேன்.

அதுதான் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. பல்வேறு திட்டங்கள் குறிப்பாக, அய்யா பொன்னம்பல அடிகளார் சொன்னார்கள். இதுவரைக்கும் அறநிலையத் துறையில் இப்படி ஒரு அமைச்சர் இருந்து பணியாற்றியதை நான் பார்த்ததே கிடையாது என்று பெருமையாக சொன்னார். அந்த அளவிற்கு, தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைய துறையின் சார்பில், அதில் அமைச்சராக இருக்கக்கூடிய சேகர்பாபு மற்றும் அவருடன் துணையாக இருக்கக்கூடிய அதிகாரிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதில் சில முக்கிய திட்டங்களை மட்டும் தலைப்புச் செய்திகளாக சொல்ல விரும்புகிறேன். இதுவரை 1921 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தி இருக்கிறோம். ₹6,147 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்களை மீட்டுள்ளோம்.

கோயில்கள் சார்பில் 10 கல்லூரிகளை உருவாக்கி வருகிறோம். அதில் ஒரு கல்லூரிதான் மயிலை கபாலீஸ்வரர் கல்லூரி. இறைப்பணியோடு சேர்த்து கல்விப் பணியையும் அறநிலைய துறை செய்கிறது. இந்த நிகழ்ச்சியில் 748 மாணவ – மாணவிகளுக்கு கல்வி கட்டணமும், கல்விக்கு தேவையான கருவிகளையும் வழங்கியுள்ளோம். கடந்த 2021 நவம்பர் மாதம் 2ம் நாள் இந்த கல்லூரியை திறந்து வைத்ததில் இருந்து, கடந்த 3 ஆண்டுகளில் 1,405 மாணவ – மாணவிகளுக்கு கல்வி கட்டணம் மற்றும் கருவிகளை வழங்கியிருக்கிறோம். சாதி, மதம், பொருளாதாரம், சமுதாயச் சூழல் என்று எதுவுமே ஒருவரது கல்விக்கு தடையாக இருக்கக் கூடாது. இதுதான் என்னுடைய எண்ணம். கல்விதான் யாரும் திருட முடியாத சொத்து. இதைத்தான் தொடர்ந்து மாணவர்களிடம் சொல்லிக் கொண்டு வருகிறேன். ‘படிப்பு – படிப்பு – படிப்பு’ இது மட்டும்தான் உங்கள் கவனத்தில் இருக்க வேண்டும்.

கல்விக்காக எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. முக்கியமாக, இதுவரைக்கும், அரசு பள்ளியில் படித்து, உயர்கல்விக்கு வரக்கூடிய மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தில் 2 லட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். அடுத்து இதுபோல மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தை வருகிற 9ம் தேதி கோவையில் தொடங்கி வைக்க உள்ளேன். படிப்புடன் சேர்த்து பல்வேறு தனித்திறமைகளையும் தமிழ்நாட்டு மாணவர் சமுதாயம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில்தான் ‘நான் முதல்வன்’ திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. அரசு தரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டு மாணவர்கள் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பொன்னம்பல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்,  சிவஞான பாலய சுவாமிகள், எம்பி கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, வெற்றியழகன், வாரியத்தின் தலைவர் ரங்கநாதன், முதன்மை செயலாளர் சந்தரமோகன், ஆணையர் தர், அறங்காவலர் குழு தலைவர் விஜயகுமார், இந்து சமய அறநிலைய துறை கல்வி குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளியின் முதல்வர் புருஷோத்தமன், அரசு உயர் அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். சாதி, மதம், பொருளாதாரம், சமுதாயச் சூழல் என்று எதுவுமே ஒருவரது கல்விக்கு தடையாக இருக்கக் கூடாது. இதுதான் என்னுடைய எண்ணம்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும்
அண்மையில் டாக்டர் குழுமத்தின் தலைவர் சந்திரசேகர், ஒரு பேட்டியில் குறிப்பிட்டு காட்டினார். உடல்நலத்தை பற்றி அக்கறையோடு அவர் பேசியிருக்கிறார். மாணவர்கள், இளைஞர்கள் இடையே ஓபிசிட்டி எனப்படும் உடல் எடை கூடி வருவதாக சொல்லியிருக்கிறார். சாப்பாட்டு பழக்க வழக்கங்கள், துரித உணவுகள்தான் இதற்கு காரணம் என்று அவர் தெளிவாக சொல்லியிருக்கிறார். சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும். எனவே, உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் படிக்க முடியும், திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும். அந்த வகையில்தான் மாணவர்களும், இளைஞர்களும் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டு இளைய சமுதாயமானது கல்வியிலும், தனித்திறமைகளிலும், விளையாட்டிலும், உடல் நலத்திலும் சிறந்தவர்களாக வளர்ந்து, மாபெரும் சக்தியாக திகழ வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Related posts

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்

செப் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்