Friday, June 28, 2024
Home » பொருள்கள் ஏற்றுமதிக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது: ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அறிக்கை

பொருள்கள் ஏற்றுமதிக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது: ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அறிக்கை

by Arun Kumar

டெல்லி: பொருள்கள் ஏற்றுமதிக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக ஒன்றிய அரசின் தன்னாட்சி அதிகாரம் பொருந்திய நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ள தமிழ்நாட்டிற்கு மேலும் மகுடம் சூட்டும் வகையில் அமைந்துள்ளது நிதி ஆயோக்கின் அறிக்கை.
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 2022-ம் ஆண்டுக்கான ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டு அட்டவணை அறிக்கையை நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் சுமன் பெர்ரி வெளியிட்டுள்ளார்.

இதில் தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக 80.89 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரம் (78.20), கர்நாடகம் (76.36), குஜராத் (73.22) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இந்தியாவின் ஏற்றுமதி பெருமளவு பாதிக்கப்பட்டது. பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகு ஏற்றுமதி அதிகரிப்பு குறித்து ஆராய்ந்து மாநிலங்களின் ஏற்றுமதி பங்களிப்பு குறித்த அறிக்கையை நிதி ஆயோக் தயாரித்துள்ளது. மாநிலங்களின் தனித்துவமான முயற்சி மற்றும் அந்தந்த மாநிலங்களின் புவியியல் சார்ந்த சாதக அம்சங்கள், மாநிலங்களிடையிலான போட்டி ஆகியன ஏற்றுமதி அதிகரிப்புக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளதாக நிதி ஆயோக் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது. போட்டிக்கான கல்வி மையத்தின் (Institute for Competitiveness) ஒத்துழைப்போடு நிதி ஆயோக் ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டு அட்டவணையைத் தயாரித்துள்ளது.

மாநில அரசுகளின் சுதந்திரமான செயல்பாடு, பிராந்திய ரீதியிலான அணுகுமுறை, தீர்க்கமான முடிவு, மாநில வளங்களில் சாதகமான அம்சங்களை உணர்வது, பலவீனங்களை ஆராய்ந்து அவற்றைக் களைவது உள்ளிட்ட நடவடிக்கைகளால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை தயாரிப்புக்குச் சில அளவீடுகள் காரணிகளாக நிர்ணயிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடையே நிலவும் போட்டித் தன்மை கருத்தில் கொள்ளப்பட்டது. இது தவிர மாநில அரசுகள் ஏற்றுமதியை அதிகரிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில்தான் மாநிலங்களிடையே ஏற்றுமதி அதிகரிப்புக்கான போட்டித் தன்மை அளவிடப்பட்டுள்ளது. ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டு அட்டவணைத் தயாரிப்பில் ஒவ்வொரு துறை வாரியான ஏற்றுமதி அளவீடுகள் மதிப்பிடப்பட்டன. இதில் முக்கியமாக மாநிலங்களில் நிலவும் நான்கு முக்கியக் காரணிகள் கருத்தில் கொள்ளப்பட்டன. அதாவது மாநில அரசின் கொள்கை, வர்த்தகத்திற்குரிய சூழல், ஏற்றுமதி அதிகரிப்புக்கான நடவடிக்கை மற்றும் ஏற்றுமதி செயல்பாடுகள் ஆகியன முக்கியமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. புள்ளிவிவரத் தயாரிப்புக்கு 56 விதமான காரணிகள் கணக்கீடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மாநில அரசின் கொள்கை: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஏற்றுமதி அதிகரிப்புக்காக வகுத்துள்ள கொள்கை, அதைச் செயல்படுத்துவதற்கான சூழல், நிறுவனங்களின் செயல்பாடுகள் சிறப்பாக அமைவதற்கான சூழலியல் ஆகியன முக்கிய அம்சங்களாகக் கணக்கிடப்பட்டன.

வர்த்தக சூழலியல்: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொழில் நிறுவனங்கள் சுதந்திரமாகச் செயல்படுவதற்கான சூழலியல், தொழில் நிறுவனங்களுக்கு மாநில அரசு அளிக்கும் சலுகை மற்றும் கட்டமைப்பு வசதிகள், போக்குவரத்து வசதி ஆகியன கணக்கில் கொள்ளப்பட்டன.

ஏற்றுமதி சூழல்: ஏற்றுமதி அதிகரிப்புக்கு மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்கள் எடுத்துள்ள நடவடிக்கை, ஏற்றுமதியாளர்களுக்கு அளிக்கப்படும் சலுகை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான கட்டமைப்பு வசதி உருவாக்கம், புத்தாக்கச் சிந்தனைகளுக்கு அளிக்கப்படும் சலுகைகள் உள்ளிட்டவையும் கவனத்தில் கொள்ளப்பட்டன.

ஏற்றுமதி செயல்பாடுகள்: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்கள் அவற்றின் மதிப்பீட்டின் அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது. இது ஆண்டுக்காண்டு அதிகரிக்கும்போதுதான் மாநில, யூனியன் பிரதேசங்கள் ஏற்றுமதி வளர்ச்சிக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை உணரலாம்., சர்வதேசச் சந்தையில் சம்பந்தப்பட்ட மாநில, யூனியன் பிரதேசத் தயாரிப்புகளுக்குக் கிடைக்கும் வரவேற்பு உள்ளிட்டவையும் ஆய்வறிக்கை தயாரிப்பில் கவனத்தில் கொள்ளப்பட்டன. இந்த நான்கு முக்கியக் காரணிகள் தவிர்த்து 10 விதமான துணைக் காரணிகள் அளவீடுகளில் பயன்படுத்தப்பட்டன.

ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை, நிறுவனங்களின் செயல்பாடு, வணிக சூழல், கட்டமைப்பு, போக்குவரத்து இணைப்பு வசதி, ஏற்றுமதிக்கான கட்டமைப்பு வசதிகள், வர்த்தக அதிகரிப்புக்கு மாநில அரசின் உதவி, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கட்டமைப்பு வசதி, ஏற்றுமதி பரவலாக்கல், வளர்ச்சிக்கான வழிமுறைகள் உள்ளிட்டவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய மாநிலங்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததாக ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் பெருமளவு கடலோரப் பகுதி உள்ளது சாதக அம்சமாகும். மேலும், சென்னைத் துறைமுகம், தூத்துக்குடி துறைமுகம் ஆகியன ஏற்றுமதி அதிகரிப்புக்கான முக்கியக் காரணிகளாகும்.

இது குறித்துத் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியுள்ளதாவது: ஆட்டோமோடிவ், தோல் பொருள்கள், ஜவுளி ஆகிய தொழில்களின் ஏற்றுமதியில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. மின்னணு பொருள் ஏற்றுமதியில் சமீபத்தில் தமிழ்நாடு முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், சென்னை, திருப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்தான ஏற்றுமதி அதிகம் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளே இதற்கு முக்கியக் காரணமாகும். காஞ்சிபுரத்திலிருந்து பட்டு மற்றும் பட்டு சார்ந்த பொருள் ஏற்றுமதி அதிகம் உள்ளது.

புவிசார் குறியீடு (ஜிஐ) சார்ந்த பொருள்கள் காஞ்சிபுரத்திலிருந்து ஏற்றுமதியாவது குறிப்பிடத்தக்கது.
சென்னையிலிருந்து பெட்ரோலியப் பொருள்கள், இன்ஜினியரிங் சார்ந்த பொருள்கள், மருந்து மற்றும் ரசாயன பொருள்கள் அதிகம் ஏற்றுமதியாகின்றன. ஜவுளித் தொழிலில் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு முன்னிலையில் உள்ளது. இங்கிருந்து பருத்தி, கைத்தறி தயாரிப்புகள் அதிகம் ஏற்றுமதியாகின்றன. ஏற்றுமதி அதிகரிப்புக்கான முக்கியமாகக் குறிப்பிடப்பட்டுள்ள 4 முக்கியக் காரணிகளிலும் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதே முதலிடம் நோக்கிய நகர்வுக்கு முக்கியக் காரணமாகும் என்று ராஜா குறிப்பிட்டுள்ளார்.

தொழில் நிறுவனங்கள் கட்டமைப்புக் குறியீட்டில் தமிழகம் 97.21 புள்ளிகளை எடுத்துள்ளது. ஏற்றுமதிக் குறியீட்டில் 73.68 புள்ளிகளும்,. ஏற்றுமதி செயல்பாட்டில் 63.34 புள்ளிகளும் எடுத்துள்ளதை ராஜா சுட்டிக் காட்டியுள்ளார். இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 9 சதவீதமாக உள்ளது. ஆட்டோமொபைல், ஜவுளி, இயந்திர பாகங்கள் உள்ளிட்டவை தமிழகத்திலிருந்து ஏற்றுமதியாகின்றன. கடல் உணவு, வேளாண் சார்ந்த பொருள்கள் ஏற்றுமதியிலும் தமிழகத்தின் பங்களிப்பு கணிசமாக உள்ளது.

2047-ம் ஆண்டில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்திய வளர்ச்சி பெறும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. தமிழ்நாடு அரசு 2030-ம் ஆண்டில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசின் செயல்திட்டங்கள், அரசின் முன்னெடுப்புகளால் 2028-ம் ஆண்டிலேயே இந்த இலக்கு எட்டப்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மின்னணுப் பொருள் ஏற்றுமதியில் முதலிடம் பிடித்துள்ள தமிழ்நாடு தற்போது ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டிலும் முதலிடத்தைப் பிடித்து பீடு நடை போடுகிறது. டிரில்லியன் டாலர் இலக்கு மட்டுமல்ல இந்திய அரசின் வளர்ச்சியில் மாநிலத்தின் பங்கு மகத்தானதாக இருக்கும் என்பதைப் பறைசாற்றுவதாகத் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

You may also like

Leave a Comment

four × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi