தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் அமைச்சர் பொன்முடி

சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளாமல் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமையில் நடந்த இந்த பட்டமளிப்பு விழாவில், இந்திய தேசிய அறிவியல் தொழில்நுட்ப கழக தலைவர் அசுதோஷ் சர்மா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இளநிலை பட்டதாரிகள் 5,302, முதுகலை பட்டதாரிகள் 3,318, தொழிற்கல்வி டிப்ளமோ 1,042, டிப்ளமோ 82, முனைவர் பட்டம் 24, எம்.பில். 8 மாணவர்கள் என மொத்தம் 9 ஆயிரத்து 776 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் முதலிடம் பெற்ற 485 மாணவ, மாணவிகளுக்கு, கவர்னர் ஆர்.என்.ரவி நேரடியாக பட்டங்கள் வழங்கி கவுரவித்தார்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்கவில்லை. முன்னதாக, சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவிற்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்க ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவை தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார். அதை தொடர்ந்து நேற்று நடந்த திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவையும் அவர் புறக்கணித்தார். இந்த பட்டமளிப்பு விழாவின் அழைப்பிதழில் அமைச்சர் பொன்முடியின் பெயர் இடம் பெற்று இருந்தது. ஆனால் அமைச்சர் தனது சொந்த ஊருக்கு சென்றிருந்ததால், தனக்கு விருப்பமில்லை என்று கூறி பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளார் என தகவல் வெளியானது.

Related posts

கடையின் பூட்டை உடைத்து செல்போன் கொள்ளை

குறைவான வரி செலுத்தி மோசடி: ஆம்னி பேருந்து பறிமுதல்

முன்னாள் திமுக பொறுப்பு குழு உறுப்பினர் இல்ல திருமண விழா: மணமக்களை வாழ்த்திய ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ