உதய் மின் திட்டத்தால் தமிழ்நாடு அரசுக்கு 5 ஆண்டுகளில் ரூ.28,000 கோடி இழப்பு: மின்துறை பொறியாளர்கள் அமைப்பு தகவல்

சென்னை: உதய் மின் திட்டத்தால் இதுவரை 5 ஆண்டுகளில் ரூ.28 ஆயிரம் கோடி இழப்பீடு மாநில அரசு வழங்கி உள்ளதாக தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அண்மையில் வீடு, வணிகம் உள்பட அனைத்து பிரிவுகளுக்கும் மின் கட்டணத்தை உயர்த்தியது. இந்த உயர்த்தப்பட்ட மின்கட்டணம் குறித்து தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பின் தலைவர், ஓய்வுபெற்ற மின்துறை பொறியாளர் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது: மின்சார கட்டணத்தை உயரத்தியதற்கு முறையான காரணத்தை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவிக்கவில்லை. தணிக்கை துறை அளிக்கும் விவரங்களும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அளிக்கும் விவரங்களும் கட்டண வசூலில் ஒத்துப்போவதில்லை.

மின்சார வாரியத்துக்கு நஷ்டம் ஏற்படுவது மக்களிடம் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதால் இல்லை. வேறு வழியில்தான் மின்சார வாரியத்துக்கு நஷ்டம் ஏற்படுகிறது. தனியாரிடம் வசூலிக்க வேண்டிய 9 ஆயிரம் கோடிக்கு மேலான சர் சார்ஜ் கட்டணத்தை 5 ஆண்டுகளுக்கு வசூலிக்காமல் விட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ரூ.1560 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தனியாருக்கு சாதகமாக செயல்படுகிறது. 1.20 கோடி பேருக்கு பாதிப்பு இல்லை என அரசாங்கம் சொல்கிறது. ஆனால் மீதமுள்ள 2 கோடி பேருக்கு பாதிப்பு இருக்கிறது. உதய் மின் திட்டத்தில் கையெழுத்து போட்டதால் இதுவரை 5 ஆண்டுகளில் 27,789 கோடி இழப்பீடு மாநில அரசு வழங்கியுள்ளது. இந்த ஆண்டு 17 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இது சுகாதாரத்துறை, உயர்கல்வி துறைக்கு ஒதுக்கிய நிதியை விட அதிகம். இதில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை