அதானி நிறுவனத்தின் வர்த்தக நலன்களுக்காக இலங்கை அரசுக்கு அழுத்தம் தந்த ஒன்றிய பா.ஜ அரசு இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைக்காக வாய்திறக்காதது ஏன்? படகுகளைப் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்கிவிட்டதாக அறிவிக்கிறது இலங்கை அரசு. இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக, வெளிப்படையாகக் கண்டிக்காதது ஏன்? 2வது முறையாகக் கைது செய்யப்படும் மீனவர்களுக்குச் சிறைத்தண்டனை வழங்கும் நடைமுறை என்பதே, பா.ஜ ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டதுதான். இதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? இதற்கெல்லாம் பதிலில்லை, தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டுக்குச் செய்து கொடுத்த சிறப்புத் திட்டங்கள் என்ன என்று ‘பதில் சொல்லுங்க பிரதமரே’ என்று தமிழ்நாட்டு மக்கள் கேட்ட கேள்விக்கும் பதில் இல்லை. ஆனால், வழக்கமான புளுகுகளும் புலம்பல்களும் மட்டும் மேடையில் எதிரொலித்தன. விஸ்வகுரு என மார்தட்டிக் கொள்ளும் பிரதமர் மவுனகுருவாக இருப்பது ஏன்? தன் சொந்த இயலாமையை மறைக்கத் திமுக மீது சேற்றை வாரி இறைக்கும் கபட நாடகத்தை எங்கள் மீனவர்கள் தோலுரிப்பார்கள். இது அரிதாரங்கள் கலைகிற காலம்.