தமிழ்நாடு கட்டுமான சங்க பொதுக்குழு கூட்டம் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் தமிழ்நாடு கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளர்கள் நல மத்திய ஐக்கிய சங்கத்தில் மாநில பொதுக்கழு கூட்டம் நடந்தது. இதில், பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் அனைவருக்கும் கட்டுமான நல வாரியத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் மழைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளர் நல மத்திய ஐக்கிய சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மதுராந்தகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாநில தலைவர் வி.ஜே.குமார் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ஜான் விஜயகுமார் முன்னிலை வகித்தார். முன்னதாக, மாநில பொது செயலாளர் ராஜசேகர் அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில், கிளை சங்கங்களின் செயல்பாடுகள் குறித்தும், அரசாங்க நலத்திட்ட உதவிகளை விரிவுபடுத்த கோருவது, சங்க விதிமுறைகளின்படி செயல்படுவது, சமூக பாதுகாப்பு திட்டங்களில் மகளிர் இணைந்து பயனடைவது, புதிய நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் தேர்வு செய்வது, கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பணி செய்ய முடியாமல் சிகிச்சை பெறுபவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் அனைவருக்கும் கட்டுமான நல வாரியத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் மழைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும். கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நகர்புறங்களில் 2 சென்ட் இடமும், கிராமப்புறங்களில் 5 சென்ட் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். விதவை பெண் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி, திருமண உதவித்தொகை வழங்க வேண்டும். கட்டுமான நல வாரியத்தில் தொழிலாளர் நல நிதிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.900 கோடி நிதியை பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு மட்டுமே செலவிட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில், சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் கண்ணன், பழனி ஆச்சாரி, அர்ஜுனன், அபிராமி ராமு, தங்கபெருதமிழமுதன் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

ஆந்திராவில் இருந்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 பேர் கைது

மதுரை திருமங்கலத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி

சதுரகிரி மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்