Monday, September 30, 2024
Home » அவுட்லுக்’ ஆங்கில இதழில் வெளியான தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களது நேர்காணலின் தமிழாக்கம்

அவுட்லுக்’ ஆங்கில இதழில் வெளியான தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களது நேர்காணலின் தமிழாக்கம்

by Arun Kumar

* 2021-ஆம் ஆண்டு நீங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது சந்தித்த பெரிய சவால்கள் என்ன?

கோவிட் இரண்டாவது பேரலை என்கிற மிக நெருக்கடியான காலக்கட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்றது. மக்களின் உயிரைக் காக்க வேண்டிய மிகச் சவாலான பணி எங்கள் முன் இருந்தது. ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட அனைத்தையும் ஒருவார காலத்திற்குள் சமாளித்து, மீண்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டோம். ஆனாலும், முந்தைய ஆட்சியாளர்களின் மோசமான நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் ஊழல் முறைகேடுகளால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், அரசின் நிதி நிலைமையும் படுபாதாளத்திற்குப் போயிருந்தது.

மாநில உரிமைகளைப் பறிக்கின்ற ஒன்றிய அரசுக்கு அடிபணிந்தவர்களாக அ.தி.மு.க ஆட்சியாளர்கள் இருந்ததால், தமிழ்நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பே சீரழிந்திருந்தது. இந்த நிலைமைகளை மாற்றி, தமிழ்நாட்டை மீண்டும் முதன்மை மாநிலமாக்க வேண்டும் என்கிற எங்கள் இலட்சியமும் இலக்கும் சவால்களுடனேயேதான் தொடங்கின. அந்தச் சவால்களை எதிர்கொண்டு இன்று பல சாதனைகளுக்கு உரிமை கொண்டாடும் மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது.

* பல்வேறு புள்ளிவிவரங்கள், தரவரிசைப் பட்டியல்களின் அடிப்படையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது தமிழ்நாட்டின் நிலை என்ன? இந்த மூன்றாண்டுகளில் கண்கூடாக உங்கள் அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்கள் என்ன?

கல்வி, மருத்துவம், அடிப்படைக் கட்டமைப்பு, பொருளாதாரம் இந்த நான்கும்தான் ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை அளவிடுவதற்கான அம்சங்கள். பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி வரை தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. இல்லம் தேடிக் கல்வி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம் ஆகியவற்றால் பள்ளிக்கல்வி பயில்வோரின் எண்ணிக்கையும், உயர்கல்விக்குச் செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

தற்போதைய பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆண் மாணவர்களுக்கான ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டமும் நல்ல பலனைத் தரும் என்று உறுதியாகச் சொல்லலாம். உயர்கல்விக்கான கட்டமைப்பில் தமிழ்நாடு எந்தளவுக்குச் சிறந்து விளங்குகிறது என்பதை அகில இந்திய அளவிலான தரவரிசைப் பட்டியலே நிரூபிக்கும். இந்தியாவின் முதல் நூறு உயர்கல்வி நிறுவனங்களில் அதிக இடங்களைத் தமிழ்நாடு பெற்றுள்ளது.

மருத்துவக் கட்டமைப்பில் ‘இந்தியாவின் மருத்துவத் தலைநகர்’ என்ற பெருமையைத் தமிழ்நாடு பெற்றுள்ளது. மக்களுக்கான மருத்துவச் சேவையில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் போன்ற திட்டங்கள் மனித உயிர்களின் மகத்துவத்தை உணர்த்தக்கூடியனவாக உள்ளன.

தொழில் வளர்ச்சியில் கடந்த 3 ஆண்டுகளில் பல கட்டங்கள் முன்னேறி இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநிலம் என்ற நிலைக்குத் தமிழ்நாடு உயர்ந்துள்ளது. மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் 2023 நிதியாண்டில் முதலிடத்துக்குத் தமிழ்நாடு உயர்ந்துள்ளது. தொழில் முதலீடுகளுக்கு உகந்த மாநிலங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 14-ஆவது இடத்தில் இருந்த தமிழ்நாடு எங்கள் ஆட்சிக்காலத்தில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. புதிய முதலீடுகள், புதிய தொழிலகங்கள், வேலைவாய்ப்புகள் என பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளோம்.

இந்தியாவில் மொத்தமாகப் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மட்டும் 40 விழுக்காடாக உள்ளது. ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்கை நோக்கிய பொருளாதார வளர்ச்சியை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்குமான சமச்சீரான வளர்ச்சியாகவும், பாலினச் சமத்துவம் கொண்ட வளர்ச்சியாகவும் கட்டமைத்து வருகிறோம். குனிந்து தேட வேண்டிய அளவில் இருந்த தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை மூன்றாண்டுகளில் நிமிர்ந்து பார்க்க வேண்டிய அளவுக்கு உயர்த்தியிருக்கிறது திராவிட மாடல் அரசு.

* குஜராத் மாடலில் இருந்து திராவிட மாடல் எப்படி வேறுபட்டது என விளக்க முடியுமா? இந்த மாடல் உங்கள் வளர்ச்சிப் பாதையில் எத்தகைய தாக்கத்தைச் செலுத்துகிறது?

திராவிட மாடல் என்பது வேறெந்த மாடலுடன் ஒப்பிட இயலாத தனித்துவமான முன்மாதிரியாகும். இதன் தொடக்கம் என்பது நூறாண்டுகளுக்கு முன்பே நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் அடித்தளமிடப்பட்டது. வகுப்புவாரி இடஒதுக்கீடு, அனைத்துச் சமுதாயத்தினருக்குமான கல்வி, வேலைவாய்ப்பு, பெண்களுக்கான வாக்குரிமை என சமூகநீதி வாயிலான சமத்துவ வளர்ச்சியை முன்னிறுத்தியது. 1967 முதல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் எல்லாம் இந்த சமச்சீரான சமூகநீதி அடிப்படையிலான வளர்ச்சியையே பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோர் முன்னெடுத்தனர்.

அதைத்தான் திராவிட மாடல் என்ற பெயருடன் தற்போது தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறோம். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கோ, ஒரு குறிப்பிட்ட பகுதிக்கோ, ஒரு குறிப்பிட்ட பாலினத்திற்கோ மட்டுமே வாய்ப்புகள் என்றில்லாமல் கல்வி, அடிப்படைக் கட்டமைப்புகள், வேலைவாய்ப்பு, தொழில் முதலீடு ஆகியவற்றைப் பரவலான அளவில் செயல்படுத்தி, ஏற்றத்தாழ்வு என்கிற இடைவெளியைக் குறைக்கின்ற வகையில் திட்டங்களைச் செயல்படுத்கின்ற மாடல்தான் திராவிட மாடல்.

மாநகரத்தில் உள்ளவர்களுக்கு கிடைப்பதுபோலவே கிராமப்புறத்தில் இருப்பவர்களுக்கும் அவரவர் ஊர்களுக்குப் பக்கத்திலேயே உயர்கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி, தலைநகரத்திற்கு வந்து செல்லக்கூடிய கட்டமைப்புகள் அனைத்தும் கொண்டது திராவிட மாடல். ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்பதுதான் திராவிட மாடலுக்கு எளிமையான விளக்கம்!

* மாநில சுயாட்சி குறித்த இராசமன்னார் குழு அளித்த அறிக்கையைச் சட்டப்பேரவையில் தி.மு.க அரசு நிறைவேற்றி 50 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 50 ஆண்டுகளில் நடந்துள்ள பெரும் அதிகாரக் குவியலை எப்படி நோக்குகிறீர்கள்?

பன்முகத்தன்மை கொண்ட பல மொழிகள் பேசக்கூடிய – பலவித பண்பாடுகளைக் கொண்ட மக்கள் வாழக்கூடிய இந்தியாவின் ஒருமைப்பாடு என்பது கூட்டாட்சிக் கருத்தியலின் அடிப்படையில்தான் அமைந்துள்ளது. மக்களை நேரடியாக சந்திக்கிறவர்களாகவும், மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றக் கூடிய இடத்தில் உள்ளவர்களாகவும் மாநில அரசாங்கத்தினர்தான் இருக்கிறார்கள். அதனால் மாநிலங்களுக்கே கூடுதல் அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்பதைத்தான் 1969-இல் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற தலைவர் கலைஞர் வலியுறுத்தினார்.

அதனடிப்படையில் அமைக்கப்பட்ட நீதியரசர் ராஜமன்னார் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளைப் பரிசீலித்து, 1974-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றினார். மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி என்பதுதான் தி.மு.கவின் உறுதியான நிலைப்பாடு.

அதற்கு மாறான வகையிலே, மாநில அரசிடம் இருக்கக்கூடிய உரிமைகளையும் பறிக்கின்ற ஒன்றிய அரசு டெல்லியிலே அமைந்துள்ளது. ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பே கல்வி, சுகாதாரம் போன்ற மாநிலப் பட்டியலில் உள்ள அதிகாரங்கள் ஒன்றிய அரசின் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் நீட் தேர்வு, உதய் மின் திட்டம், ஜி.எஸ்.டி. என மாநிலங்களின் அதிகாரத்தை முற்றிலுமாகப் பறிக்கும் செயல்பாடுகள் மிக அதிகமாக நிறைவேறியுள்ளன.

இது ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரான மோசமான நடவடிக்கையாக உள்ளது. அதனால்தான், தமிழ்நாடு, அதிலும் குறிப்பாக, தி.மு.க. மாநில உரிமைகளைத் தொடர்ந்து வலியுறுத்துவதுடன், மாநில சுயாட்சிக் கொள்கையை வலியுறுத்தி வருகிறது.

* கல்வி, மருத்துவம், மகளிர் நலன் எனச் சமூகநலனுக்கான முதலீடுகளில் தி.மு.க. எப்போதுமே அக்கறையோடு இருந்து வந்துள்ளது. இவற்றை இலவசங்கள் என்று கூறி, சமூக வளர்ச்சியில் அவற்றின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்ட சிலர் முயலுகிறார்கள். இத்தகைய விமர்சனங்களை நீங்கள் எவ்வாறு கையாளுகிறீர்கள்?

இத்தகைய விமர்சனங்கள் தி.மு.க.வுக்குப் புதியதல்ல. அவை புளித்துப் போனவை. கலைஞர் ஆட்சியில், சட்டமன்ற உறுப்பினராக இருந்த நான் வலியுறுத்தியதைத் தொடர்ந்து +2 மாணவர்கள் வரை பஸ் பாஸ் கொடுக்கப்பட்டது. அப்போது அதை இலவசம் என்று விமர்சித்தார்கள். ஆனால், அந்த பஸ் பாஸ் பெற்ற கிராமப்புற ஏழை மாணவர்கள் இன்று உயர்கல்வி முடித்து இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் உயர்ந்த பணிகளில் இருக்கிறார்கள். அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் செலுத்தும் வரி ஒன்றிய அரசின் கருவூலத்திற்குத்தான் செல்கிறது. அன்றைக்குக் கலைஞர் அரசு கொடுத்தது என்பது இலவசமல்ல; ஒரு தலைமுறையை வளரச் செய்வதற்கான சிறிய முதலீடு! அதன் பயனை இன்று உணர்கிறோம்!

முட்டையுடன் கூடிய சத்துணவுத் திட்டம், கலர் டி.வி., உழவர்களுக்கான மின்சாரம் என எல்லாத் திட்டங்களும் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய சமூகநலத் திட்டங்கள்தான். நகரப் பேருந்துகளில் பெண்களுக்கான கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் 800 ரூபாய் வரை மிச்சப்படுத்தி, சேமிப்பாக மாற்றுவதுடன், தங்களின் வேலை, சுயதொழில், நேர்காணல் ஆகியவற்றுக்காக வெளியில் செல்ல முடியும் என்ற தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

சமுதாயத்தில் பாதிக்கும் மேலான அளவில் பெண்களின் எண்ணிக்கை உள்ள நிலையில், இது ஒரு சமுதாய மாற்றத்திற்கான அமைதிப் புரட்சிக்கான திட்டமாக அமைந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மற்ற மாநிலங்களும் இதனைப் பின்பற்றுகிற நிலையில், சமுதாய நிலை பற்றிய தெளிவோ புரிதலோ இல்லாத குறுகிய பார்வை கொண்டவர்கள்தான் இத்தகைய திட்டங்களை இலவசம் என்று சொல்லி தங்கள் அறியாமையை வெளிப்படுத்துகிறார்கள்.

* தவறான ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்தலும், நிதிப் பகிர்வில் மாநில அரசுகளை மதிக்காத போக்கும் நிலவும் சூழலில் நீங்கள் எப்படி திட்டங்களைத் தீட்டி, இத்தகைய நிதி நெருக்கடியில் அவற்றைத் தொடர்ந்து செயல்படுத்துகிறீர்கள்?

2023 டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களும், திருநெல்வேலி – தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களும் பேரிடரை எதிர்கொண்ட நிலையில், பிரதமர் மோடி அவர்களிடம் நான் நேரில் சந்தித்து வலியுறுத்தியும் பேரிடர் நிவாரண நிதியை இதுவரை வழங்கவில்லை.

மாநில அரசே தனது பங்களிப்பாகக் குடும்ப அட்டைதாரர்களுக்கு 6000 ரூபாய் வழங்கியது. ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாட்டின் பங்களிப்பாகச் செலுத்தப்படும் ஒவ்வொரு ரூபாய் வரிக்கும் 29 பைசா மட்டுமே ஒன்றிய அரசின் பகிர்வாகத் திரும்பக் கிடைக்கிறது. மிகக் கடினமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டாலும், மக்கள் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் சுணக்கமின்றிச் செயல்படுகிறோம்.

மாநில அரசுக்குக் கிடைக்கக்கூடிய பத்திரப் பதிவுத் துறை வருவாய், வாகனப் பதிவு வருவாய், புதிய முதலீடுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு திட்டங்களுக்கான முன்னுரிமை அடிப்படையில் ஒவ்வொன்றையும் கவனித்துச் செயல்படுத்துகிறோம். மூன்றாண்டு காலத்தில் நிமிர்த்தப்பட்ட பொருளாதார நிலையினால் தமிழ்நாடு இதனைச் சமாளிக்கிறது.

* நீங்களும் உங்கள் திராவிட முன்னேற்றக் கழகமும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின் மையமாக இருக்கிறீர்கள். எத்தகைய சவால்கள் உங்கள் முன் உள்ளன? இந்தியா கூட்டணியில் இருந்து நிதீஷ்குமார் வெளியேறியது உங்கள் வெற்றி வாய்ப்பைப் பாதிக்குமா?

இந்தியா கூட்டணியின் தொடக்க கூட்டத்திலேயே அந்தந்த மாநிலங்களில் வலிமையுள்ள கட்சிகளைக் கருத்திற்கொண்டு தொகுதிப் பங்கீட்டினை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். நிதீஷ்குமார் அவர்கள் சொந்தக் காரணங்களைக் கருதி வெளியேறினாலும் அவருடைய பீகார் மாநிலத்தில் இந்தியா கூட்டணி வலுவாக இருப்பதுடன், அங்கே தொகுதிப் பங்கீடும் சுமுகமான முறையில் நடந்து வருகிறது. அதுபோலவே வாய்ப்புள்ள இடங்களில் தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் தங்களுக்குரிய பங்களிப்புடன் செயல்படுகின்றன. தேர்தல் களம் என்று வருகிறபோது ஒரு சில சவால்கள் எல்லாத் தரப்புக்கும் இருக்கும். மக்கள் மனங்களை வெல்வதில் இந்தியா கூட்டணிக்கு எந்தச் சவாலும் இல்லை.

* அமலாக்கத்துறை, வருமானவரித் துறை போன்ற விசாரணை அமைப்புகள் ஒன்றிய அரசின் அரசியல் கருவிகளாக மாறி வருவதையும் அது இந்தியா ஜனநாயகத்தைச் சிதைப்பதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?

சுதந்திரமான விசாரணை அமைப்புகளை ஒன்றிய பா.ஜ.க அரசு தன் கைப்பாவையாகப் பயன்படுத்துகிறது என்பதை எதிர்க்கட்சிகளான நாங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. மக்களே அதைச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.

பா.ஜ.க. ஆட்சியல்லாத மாநிலங்களில் உள்ள ஆளுங்கட்சியினர் மீதுதான் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. ஆகியவை பாய்கின்றன. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள ஊழல் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஏற்கனவே ஊழல் புகாருக்கு ஆளான எதிர்க்கட்சி பிரமுகர் திடீரென பா.ஜ.க. பக்கம் சென்றுவிட்டால் உடனே அவரை புனிதராக்கி, அமைச்சர் பதவி கொடுக்கும் அளவிற்குக் கறை நீக்கக்கூடிய ‘அற்புத வாஷிங் மிஷின்’ பா.ஜ.க.விடம் இருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொண்டு விட்டார்கள்.

தேர்தல் நெருங்க நெருங்க பா.ஜக.. அல்லாத கட்சியினர் மீதான பாய்ச்சல்கள் இன்னும் கூடுதலாக இருக்கும். அதனை எதிர்கொள்வதற்கான வலிமை இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உண்டு. பா.ஜ.க.வை முழுமையாக அம்பலப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அது அமையும்.

* ஆளுநர் பதவியைப் பற்றி பல ஆண்டுகளாகத் திமுக விமர்சனத்தைக் கொண்டுள்ளது. 1967-இல் இருந்து தி.மு.க ஆளுங்கட்சியாகவோ வலிமையான எதிர்க்கட்சியாகவோ தொடர்ந்து இருந்து வருகிறது. ஆளுநர்கள் போடும் முட்டுக்கட்டைகளை மீறித் தமிழ்நாடு எப்படி தனது அரசியல் அபிலாஷைகளை நனவாக்குகிறது?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மீறிய அதிகாரம், நியமனப் பதவியான ஆளுநருக்குக் கிடையாது என்பதைத் தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் காலத்திலிருந்தே ஆளுநர் பதவியை நீக்க வேண்டும் என்றும், ஆளுநர் பதவி அவசியம் என்றால் அது மாநில அரசின் பங்களிப்போடு, தேர்ந்தெடுக்கும் முறையில் அமைந்திட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்துள்ளோம்.

அண்மைக் காலமாக வெளிப்படையான அரசியல்வாதிகளைப் போல ஆளுநர்கள் செயல்படுவதைத் தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளம், தெலங்கானா, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் காண்கிறோம். ஆளுநரின் அதிகார வரம்புமீறல்களைச் சட்டமன்றத்தில் எதிர்கொண்டு முறியடித்தோம். நீதிமன்றத்திலும் சட்டவழியில் போராடிக் கொண்டிருக்கிறோம். அரசியல்சட்டத்தை மதிக்காமல், ஜனநாயகத்தின் மாண்புகளைக் கெடுக்கும் வகையில் ஆளுநர்களை வைத்து இணை அரசாங்கம் நடத்த முற்படும் ஒன்றிய பா.ஜ.க அரசின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்.

* 2024 தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற உதவும் காரணிகளாக எவை இருக்கும்? தோற்கடிக்க முடியாத கட்சி எனப் பா.ஜ.க தங்களைப் பற்றி முன்னெடுத்து வரும் பரப்புரை 2004-இல் இந்தியா ஒளிர்கிறது என அவர்கள் கூறியதை நினைவுபடுத்துகிறதே. மோடியை வெல்வது உண்மையில் சாத்தியமா?

ஜனநாயக நாட்டில் யாரும் நிரந்தரமாக முடிசூட்டிக் கொள்ள முடியாது. 2004-இல் ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று பா.ஜ.க. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க நினைத்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் அதற்கு எதிர்மறையாக அமைந்தன. பத்தாண்டு கால பா.ஜ.க .ஆட்சியில் இந்தியாவில் பெரும் தொழிலதிபர்கள் தவிர வேறு எந்த ஒரு தரப்பினரும் நிம்மதியாக இல்லை. உழவர்கள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், மாணவர்கள், சிறுபான்மையினர், பட்டியலின மக்கள் எனப் பல தரப்பினரும் எதிர்கொள்கின்ற சிக்கல்களே இந்தியா கூட்டணிக்குச் சாதகமானதாக அமையும். யார் பிரதமராக வரவேண்டும் என்பதைவிட, மீண்டும் யார் வந்துவிடக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அது தேர்தல் முடிவுகளில் தெரியும்.

* தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?

மு.க.ஸ்டாலினைக் கட்சியின் தலைவர் பொறுப்பில் அமர வைத்த தொண்டர்களின் உழைப்பும், மக்களின் நம்பிக்கையும்தான் முதலமைச்சர் ஸ்டாலின் என்ற பொறுப்பை வழங்கியிருக்கிறது. வெற்றிச் சான்றிதழைப் பெற்றபிறகு, கலைஞரின் நினைவிடத்தில் நான், “வாக்களித்தோர் மனநிறைவு கொள்ளும் வகையிலும், வாக்களிக்காதவர்கள் இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று நினைக்கக்கூடிய வகையிலும் அனைவருக்குமான ஆட்சியாக இருக்கும்” என்று உறுதியளித்தேன். அதனை முழுமையாக நிறைவேற்றி வரும் முதலமைச்சர் ஸ்டாலினாகிய நான், கட்சித் தொண்டர்கள் எதிர்பார்ப்பதுபோல, தி.மு.க ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் வகையிலான கட்சித் தலைவர் ஸ்டாலினாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

* பா.ஜ.க மீது நீங்கள் தொடர்ந்து வைக்கும் குற்றச்சாட்டுகளாலும் அவர்களுக்கு எதிராகத் தேசிய அளவில் நீங்கள் கூட்டணியைக் கட்டமைப்பதாலும்தான் ஒன்றிய அரசு உங்களைக் குறிவைக்கிறது எனக் கருதுகிறீர்களா?

எதிர்ப்புகளோ தாக்குதல்களோ எனக்கோ தி.மு.க.வுக்கோ புதிதல்ல. எப்போதெல்லாம் ஜனநாயகத்திற்கு ஆபத்து நேர்கிறதோ அப்போது எதிர்ப்புக் குரல் கொடுக்கும் இயக்கங்களில் முதன்மையானது திராவிட முன்னேற்றக் கழகம்.

ஆதரித்தாலும் – எதிர்த்தாலும் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பவர் கலைஞர் கருணாநிதி என்று சொன்னவர் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அம்மையார். நான் கலைஞரின் மகன். ஆதரிக்க வேண்டிய நல்லவற்றை ஆதரிப்பதிலும் உறுதியாக இருப்பேன். எதிர்க்க வேண்டிய தீமைகளை எதிர்ப்பதிலும் உறுதியாக இருப்பேன்.

You may also like

Leave a Comment

4 + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi