தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மாநிலங்களவையில் அவர் பேசியதாவது: நீட் தேர்வை பொருத்தவரை ஆரம்ப காலம் முதலே திமுக எதிர்த்து வருகிறது. நீட் தேர்வின் பாதிப்பால் தமிழ்நாட்டில் மாணவி அனிதா தொடங்கி சதீஷ்குமார் வரை, 22 மாணவ, மாணவிகள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். நீட் தேர்வு விலக்கு..எங்கள் இலக்கு என்று கூறி தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்தாண்டு அக்டோபர் மாதம் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கினார். இதற்கு தமிழ்நாட்டில் 1.10 கோடி பேர், நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்திட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்த நீட் தேர்வால் பயிற்சி மையங்கள் நடத்தக் கூடியவர்களே அதிக பயன் பெறுகிறார்கள். ஒவ்வொரு மாணவரும் நீட் தேர்வு பயிற்சிக்கு செல்ல ஆண்டொன்றுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதனால்தான் திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வருகிறோம். நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சமீபத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒன்றிய அரசு, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தமிழ்நாட்டில் 1.10 கோடி பேர், நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்திட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

Related posts

திண்டுக்கல்லில் மாநகராட்சி இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட்..!!

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 99% கூடுதலாக பதிவு..!!

பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 146 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்