தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்குள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை 7 செ.மீ. முதல் 11 செ.மீ. வரை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று முதல் 31ம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு தெற்கு மத்திய வங்கக்கடல், வடக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல் மத்திய அரபிக்கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், தென்கிழக்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகள், கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது மிக மிக அவசியமாகும்: நடிகர் சங்கத் தலைவர் நாசர்

மகாவிஷ்ணு கைது விவகாரத்தில் சட்டம் கடமையை செய்துள்ளது: செல்வபெருந்தகை பேட்டி

மூடநம்பிக்கை செயல்கள் பள்ளிகளில் நடக்காமல் அரசு தடுக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்