தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளை தூர்வாரும் பணி இம்மாத இறுதிக்குள் முடியும்: ஒரே நேரத்தில் 77 இடங்களில் பணிகள்; நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் இம்மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில், ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை காலம் இருக்கும். தென்மேற்கு பருவமழை காலம் நிறைவு பெற்றவுடன் வடகிழக்கு பருவமழையானது தொடங்கும். இந்த பருவமழை காலத்தில்தான் தமிழகம் உள்பட தென் இந்திய பகுதிகளில் சில இடங்களுக்கு அதிகளவு மழை கிடைக்கும்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மழைநீர் வடிகால்களில் உள்ள இயற்கை தாவரங்கள், மிதக்கும் குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகள் ஆகியவற்றை பருவமழைக்கு முன்னர் அகற்றவும், அனைத்து நீர்நிலைகளும் உறுதியான நிலையில் உள்ளதாக உள்ளிட்ட பணிகளை நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள நீர்வழிகளை இம்மாதம் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள போரூர், நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை சுத்தம் செய்யும் பணிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில்: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை சுத்தம் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது 30% பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இப்பணியை இம்மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களில், 184.45 கி.மீ., தூரம் செல்லும் வாய்க்கால்களில், ஒரே நேரத்தில் 77 இடங்களில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. பருவமழையை கருத்தில் கொண்டு, நீர்நிலைகளில் ஒரே சீரான ஓட்டத்திற்காக 137 இயந்திரங்களுடன் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி விருகம்பாக்கம் மற்றும் அரும்பாக்கம் இடையிலான கால்வாயின் குறுகலான பகுதியில் நீர்வழிப்பாதைகள் உள்ளது.

இதில் உள்ள செடிகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதற்காக கிரேன்கள் போன்ற இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அந்த கழிவுகளை கிரேன்கள் மூலமாக வேறுஇடத்திற்கு மாற்றப்படும் வகையில் கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு அனுப்பப்படுகிறது. இந்த பணிகளை கண்காணிப்பதற்காக பொறியாளர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் மற்றும் அரும்பாக்கம் இடையேயான கால்வாய், பக்கிங்காம் கால்வாய் மற்றும் ஓட்டேரி பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னை மாநகராட்சியின் உதவியுடன் 72 லாரிகளில் மரங்கள் மற்றும் செடிகள் அகற்றப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

Related posts

தொடர் விபத்துக்கு பாதுகாப்பு வசதி, கண்காணிப்பு இல்லாததே காரணம்: மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை

திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை அக்டோபர் 2ஆம் தேதி போக்குவரத்து மாற்றம்

2 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் ஜம்மு – காஷ்மீரில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு: 40 பதவிக்கு 415 வேட்பாளர்கள் போட்டி