உஷார் மக்களே!: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கொட்டி தீர்க்கும் கனமழை.. அல்லல்படும் வாகன ஓட்டிகள்..!!

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தென் இலங்கை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த மாதம் டிசம்பர் 2தேதி வரை 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நள்ளிரவில் கனமழை பெய்த நிலையில், காலையிலும் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாகை மாவட்டம் நாகூர், புத்தூர், திருமருகல், திருப்புகலூர், புத்தகரம், சிக்கல், கீழ்வேளூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், பூம்புகார், பழையார், திருமுல்லைவாசல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்கிறது. கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. திருக்கோவிலூர் மற்றும் சுற்று வட்டார இடங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதேபோல், அரும்பாக்கம், மணலூர்பேட்டை, தாழனூர் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது. அரகண்டநல்லூர், தேவனூர், மனம்பூண்டி, கண்டாச்சிபுரம் உள்ளிட்ட இடங்களிலும் ஒருமணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்கிறது.

புதுச்சேரியில் பரவலாக மழை

புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு, அரியாங்குப்பம், முள்ளோடை, கிருமாம்பாக்கம், பாகூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தவளக்குப்பம், வில்லியனூர், திருபுவனை உள்ளிட்ட பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!