மருத்துவ படிப்பு இடங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் உத்தரவு நிறுத்திவைப்பு… தமிழக அரசின் எதிர்ப்பிற்கு பணிந்தது ஒன்றிய அரசு!!

டெல்லி : மருத்துவ படிப்பு இடங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் உத்தரவை தேசிய மருத்துவ ஆணையம் நிறுத்திவைத்துள்ளது. இந்தியாவின் தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அதில், புதிதாக மருத்துவக் கல்லூரியைத் துவங்க வேண்டும் என்றாலோ, ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் இருக்கும் இளநிலை மருத்துவப் படிப்பு (எம்.பி.பி.எஸ்) இடங்களை அதிகரிக்க வேண்டும் என்றாலோ குறைந்தபட்சமாக என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டு இருந்தன. மேலும், இந்த விதிகள் யாருக்கெல்லாம் பொருந்தும் என்றும் அந்த அறிக்கை விவரித்தது. அதில் இறுதியாகக் குறிப்பிட்டிருந்த ஒரு வரிதான் தமிழகத்தை அதிரவைத்தது.அதாவது “ஒரு மாநிலத்திலோ, யூனியன் பிரதேசத்திலோ பத்து லட்சம் பேருக்கு 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் என்ற விதிக்கு அந்த மருத்துவக் கல்லூரி” பொருந்தியிருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

ஒன்றிய அரசின் இந்த கட்டுப்பாடு காரணமாக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் புதிதாக மருத்துவக் கல்லூரி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. பீகார், ஜார்க்கண்ட் போன்ற வடமாநிலங்களில்
மருத்துவ இடங்களை அதிகரிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன.ஒன்றிய அரசின் இந்த முடிவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.மருத்துவ இடங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் முடிவை கைவிடக்கோரி ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி இருந்தார்.இதன் எதிரொலியாக வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்த திட்டமிட்டு இருந்த மருத்துவ படிப்பு இடங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் உத்தரவை ஓராண்டுக்கு தேசிய மருத்துவ ஆணையம் நிறுத்தி வைத்தது.அனைத்து மாநிலங்களுடன் ஆலோசித்து ஒருமித்த முடிவை எட்டும் வரை கட்டுப்பாடுகள் விதிக்கும் முடிவு ஒத்திவைக்கப்படுவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Related posts

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 2 பேர் உயிரிழப்பு

ஜப்பான் நாட்டின் போனின் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சென்னையில் சிறுவனை கடித்த தெருநாய்