தமிழக சுற்றுலா தலங்களில் ரூ.40 கோடியில் வளர்ச்சி பணி: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

ஊட்டி: தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் ரூ.40 கோடியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம், ஊட்டி படகு இல்லம் வளாகத்தில் தொங்கும் பாலம், ஜிப் லைன் உட்பட பல்வேறு சாகச விளையாட்டுகள் கொண்டு வருவதற்கான பணிகள் நடக்கிறது. இப்பணிகளை நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் சுற்றுலாத்துறை ஆணையாளர் சமயமூர்த்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, கலெக்டர் அருணா உடன் இருந்தார்.

பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: சுற்றுலா பயணிகள் பலரும் ஊட்டிக்கு வந்துவிட்டு திரும்பிவிடுகின்றனர். அவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் வகையில், கோத்தகிரி, குன்னூர் போன்ற பகுதிகளில் சுற்றுலாத்துறை மூலம் புதிதாக சுற்றுலா தலம் உருவாக்க வாய்ப்புள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்படும்.கடந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கு 28 கோடி சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இந்த ஆண்டு 32 கோடியாக அதிகரித்துள்ளது. பல்வேறு சுற்றுலா தலங்களிலும், புதிதாக சாகச விளையாட்டுகள் அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் ரூ.40 கோடியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஒன்றிய அரசிடமும் நிதி கேட்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு நிதி வந்தால், மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

ஆடி அமாவாசையை முன்னிட்டு நீர்நிலைகளில் குவிந்த மக்கள்: புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

வடலூரில் தனியார் பள்ளியில் விளையாட்டு பயிற்ச்சியின் போது உயிரிழ்நத மாணவன் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்

நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் முதன்முறையாக பூண்டு ஏலம் துவங்கியது