தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடல் கட்சி தலைவர்கள், வியாபார சங்கங்கள் வரவேற்பு

சென்னை: தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகளை மூடியதற்கு வைகோ, திருமாவளவன் மற்றும் வியாபாரிகள் சங்க தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
வைகோ (மதிமுக): தமிழ்நாடு சட்டப்பேரவையில், கடந்த ஏப்ரல் 12ம் தேதி, தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 5329 மதுக்கடைகளில் 500 டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் ஜூன் 22ம் தேதி (நேற்று) முதல் மூடப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.அதே நேரத்தில், ‘முழு மதுவிலக்கே நமது இலக்கு’ என்ற நோக்குடன் அரசு படிப்படியாக மதுக்கடைகளை மூடி, மது இல்லாத மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்தரசன் (இந்திய கம்யூ. மாநில செயலாளர்): தமிழ்நாடு அரசின் படிப்படியான மதுவிலக்கு கொள்கையை அமலாக்கும் முறையில் 500 மதுக்கடைகள் மூடப்பட்டிருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. அரசின் நடவடிக்கை படிப்படியான மதுவிலக்கை தொடர்ந்து செயல்படுத்தி பரிபூரண மதுவிலக்கை அரசு அமலாக்கும் என்ற நம்பிக்கைக்கு ஊக்கமளிக்கிறது.

திருமாவளவன் (விசிக தலைவர்): தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடப்படுவதாக அரசு அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அரசின் இந்நிலைப்பாட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்றுப் பாராட்டுகிறது. இனிமேல் புதிய மதுக்கடைகள் ஏதும் திறக்கப்படாது என்பதையும் அறிவிக்க வேண்டும்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா: தமிழகத்தில் பூரண மது விலக்கு என்பது அனைத்து மக்களின் அடிப்படை வேண்டுகோளாய் இருந்தாலும், பல்வேறு காரணங்களால் ஒட்டுமொத்த மதுக்கடைகளை மூடுவதற்கான சூழல் இல்லை. எனினும் 500 மதுபானக்கடைகள் மூடப்படும் என்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு அனைத்து தரப்பினரும் தங்களின் ஆதரவை தெரிவிக்கிறார்கள். குறிப்பாக இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தனது ஆதரவையும், அடித்தட்டு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

ஜி.கே.வாசன் (தமாகா): மாணவர்களும், இளைஞர்களும் மதுவின் பிடியில் இருந்து விடுபடவும், வளமான தமிழகம் உருவாகவும் மது இல்லாத தமிழகமே தேவை. எனவே. தமிழக அரசு 500 மதுக்கடைகளை மூடும் அதே சமயம், இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை மூடி குறுகிய காலத்திற்குள் மதுக்கடைகள் இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும்.

ஜவாஹிருல்லா (மமக தலைவர்): தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்படும் என சட்டமன்றப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, கடந்த ஏப்ரலில் வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில் 500 மதுக்கடைகளை மூடி தமிழ்நாடு அரசு உத்தரவு வெளியிட்டுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. மதுக்கடைகள் மூடப்படும் பகுதிகளில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்பட்டால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

கோவிந்தராஜூலு (தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர்): தமிழகத்தில் 500 மதுபானக் கடைகள் மூடப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு அனைத்து தரப்பினரும் தங்களின் ஆதரவை தெரிவிக்கிறார்கள்.
குறிப்பாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவையும், அடித்தட்டு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும், மார்க்கெட், பஜார் பகுதிகள், மாணவர்கள் நிறைந்த பள்ளி, கல்விக்கூடங்கள், கல்லூரிகள், ஆன்மிக தலங்கள் நிறைந்த பகுதிகளில் செயல்படும் மதுபானக் கடைகளை படிப்படியாக மூடுவதற்கு, தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முதல்வருக்கு முன் வைக்கிறது.

Related posts

மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கொள்ளையடித்து தலைமறைவான மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி துணைத்தலைவர் கைது