கேலோ இந்தியா போட்டியை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் இந்தியாவின் விளையாட்டு தலைநகரமானது தமிழ்நாடு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: கடந்த 2 வாரங்களாக நடந்து வந்த கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டி நேற்றுடன் முடிந்தது. நிறைவு விழா நேற்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை வெற்றிகரமாக நடத்தியிருப்பதன் மூலம் இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாடு நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிக பதக்கங்கள் ெபற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மகாரஷ்டிரா, தமிழ்நாடு, அரியானா ஆகிய மூன்று மாநில வீரர்களுக்கு பாராட்டுகள். இதுவரை பல்வேறு தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு பங்கேற்றுள்ளது. இப்போது தான் வரலாற்றில் முதன்முறையாக முதல் மூன்று இடங்களுக்குள் தமிழ்நாடு இடம் பிடித்துள்ளது. கடந்த ஓராண்டில் பல்வேறு தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் ெவற்றிகரமாக நடத்த திராவிட மாடல் அரசு மேற்கொண்ட முன் முயற்சிகள் தான் காரணம்.

போட்டியில் வெற்றி பெற்றவர்கள் வெறும் பதக்கங்களை மட்டும் பெறவில்லை, அந்த விளையாட்டின் மாநிலத்தின் தூதர்களாக மாறியுள்ளீர்கள். விளையாட்டு போட்டியை மிகச்சிறப்பாக நடத்திட உதவிய விளையாட்டுத் துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா உள்ளிட்ட அதிகாரிகள், ஊழியர்கள், பணியாளர்கள், தன்னார்வலர்கள், இந்திய விளையாட்டு ஆணையத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார். இதை தொடர்ந்து ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக்சிங் தாகூர் பேசியதாவது:

கடந்த 7 ஆண்டுகளாக கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் மூலம் பல்வேறு புதிய திறமைகள் கண்டறியப்பட்டு சர்வதேச அளவில் இந்தியா சாதனை புரிய வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது. இந்த போட்டியின் மூலம் வீரர், வீராங்கனைகள் சம அளவில் வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். எளிய குடும்ப பின்னணியில் விளையாட்டு தொடர்பான வசதிகள் இல்லாத கிராமங்களை சேர்ந்தவர்கள் கூட தங்கப்பதக்கங்களை வென்றதுடன் புதிய சாதனை படைத்துள்ளனர். இந்த போட்டியை சிறப்பாக நடத்திய தமிழ்நாடு விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய மற்றும் மாநில அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள். பல்வேறு இடர்பாடுகள் வந்தாலும் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஸ்பீடு ஸ்கேட்டிங் வீராங்கனை ஆர்த்தி திகழ்கிறார். பெரும் விபத்தில் இருந்து மீண்ட அவர் ஆசிய விளையாட்டு போட்டிகள் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். விளையாட்டு மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக ராமர் கோயில் திறப்பு விழா, உபவாசம் இருந்து வந்த போதிலும் பிரதமர் மோடி இந்த போட்டியை தொடங்கி வைக்க தமிழ்நாட்டிற்கு வந்து விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார் என்றார்.

* 12 ஆயிரம் கிராமங்களுக்கு விளையாட்டு உபகரணம்

விளையாட்டு என்பது வசதியானவர்களுக்கு என்று இல்லாமல், ஏழை எளியவர்களுக்கும், கடைக்கோடியில் உள்ளவர்களுக்கும் வாய்ப்பாக அமைய வேண்டும் என்று அரசு செயல்பட்டு வருகிறது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 12 ஆயிரம் கிராமங்களுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு அளிக்கப்படும். இந்நிகழ்ச்சியை வரும் 7ம் தேதி திருச்சியில் தொடங்கி வைக்கிறேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 339 ரன்களை குவித்தது இந்தியா