தமிழகம் முழுவதும் முக்கிய துறைகளின் செயலாளர்கள் உள்பட 65 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: சென்னை மாநகராட்சி கமிஷனரானார் குமரகுருபரன்; 10 மாவட்டங்களுக்கும் புதிய கலெக்டர்கள்

* உள்துறை செயலாளர் தீரஜ் குமார்
* பள்ளிக்கல்விக்கு மதுமதி நியமனம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் முக்கிய துறைகளின் செயலாளர்கள் உள்பட 65 ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று அதிரடியாக மாற்றப்பட்டனர். உள்துறை செயலாளராக தீரஜ்குமார், பள்ளி கல்வித்துறை செயலாளராக மதுமதி நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி கமிஷனராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: சிட்கோ மேலாண்மை இயக்குனராக இருந்த எஸ்.மதுமதி பள்ளிக் கல்வித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இருந்த ஜெ.குமரகுருபரன் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளராக இருந்த கே.கோபால் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையராக இருந்த ஹர்சகாய் மீனா சிறப்பு முயற்சிகள் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்நுட்பக் கல்வித்துறை ஆணையராக இருந்த கே.வீரராகவ ராவ் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளராக இருந்த குமார் ஜெயந்த், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளராக இருந்த தீரஜ் குமார், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை செயலாளராக இருந்த பி.அமுதா வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக இருந்த ராஜாராமன் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு காதி கிராம தொழில்கள் வாரிய தலைமை செயல் அதிகாரி எஸ்.சுரேஷ்குமார் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை கூடுதல் செயலாளராகவும், திருவண்ணாமலை டிஆர்டிஏ திட்ட அதிகாரியாக பணியாற்றி வந்த சி.ஏ.ரிஷப் நிதித்துறை துணை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக இருந்த பி.விஷ்ணு சந்திரன் பொதுத்துறை துணை செயலாளராகவும், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக இருந்த எஸ்.வளர்மதி சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு பணிபுரியும் பெண்கள் விடுதி கழகத்தின் மேலாண் இயக்குனராகவும் இருப்பார்.

அரியலூர் மாவட்ட கலெக்டராக இருந்த ஜெ.ஆனி மேரி ஸ்வர்ணா உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை இணை செயலராகவும், கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் கலெக்டராக இருந்த ஸ்ரவண் குமார் ஜடாவத் வீட்டு வசதித்துறை இணை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளரான எல்.சுப்பிரமணியன், பொதுத்துறை துணை செயலாளரான சிவஞானம் ஆகியோருக்கு மாற்றப்பட்ட பதவிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் பிறப்பித்த மற்றொரு உத்தரவில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் இயக்குனராக பணியாற்றி வந்த ஜெ.யு.சந்திரகலா ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராகவும், நீலகிரி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த எம்.அருணா புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராகவும், ஈரோடு மாவட்ட வணிகவரி இணை ஆணையராக பணியாற்றி வந்த லட்சுமி பவ்யா தண்ணீரு நீலகிரி மாவட்ட கலெக்டராகவும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழக முன்னாள் செயல் இயக்குனர் பி.பிரியங்கா தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிப்காட் செயல் இயக்குனராக பணியாற்றி வந்த பி.ஆகாஷ் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராகவும், சென்னை வணிகவரி (நிர்வாகம்) இணை ஆணையராக பணியாற்றி வந்த பி.ரத்தினசாமி அரியலூர் மாவட்ட கலெக்டராகவும், நிதித்துறை துணை செயலாளராக பணியாற்றி வந்த சிபி ஆதித்ய செந்தில்குமார் கடலூர் மாவட்ட கலெக்டராகவும், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் ஆர்.அழகுமீனா கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராகவும், தொழில் மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ் பெரம்பலூர் மாவட்ட கலெக்டராகவும், நகராட்சி நிர்வாகம் கூடுதல் ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு டிஆர்டிஏ திட்ட இயக்குனராக பணியாற்றி வந்த நர்னவரே மணீஷ் சங்கர்ராவ் ஈரோடு மாநகராட்சி ஆணையராகவும், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ஜெ.விஜயா ராணி சென்னை மாநகராட்சி இணை ஆணையராகவும் (கல்வி), சேலம் மாநகராட்சி ஆணையர் எஸ்.பாலச்சந்தர் தாம்பரம் மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் உள்ள தமிழக இல்லத்தின் கூடுதல் கமிஷனராக ஆஷிஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கமிஷனராக இருந்த ஷன்சூங்கம் ஜதாக் சிரு போக்குவரத்து துறை கமிஷனராகவும், போக்குவரத்து துறை ஆணையராக இருந்த சண்முகசுந்தரம், கைத்தறி துறை இயக்குராக நியமிக்கப்பட்டுள்ளர்.

தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வந்த ஆர்.கஜலட்சுமி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனராகவும், சமூக நலன்துறை கூடுதல் இயக்குனராக பதவி வகித்து வந்த கார்த்திகா, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை இயக்குனராகவும், முதல்வரின் முகவரி சிறப்பு அதிகாரியாக பதவி வகித்து வந்த டி.மோகன், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையராகவும், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக பதவி வகித்து வந்த தாகரே சுபம் தியானந்தேராவ், ஈரோடு மாவட்ட வணிக வரித்துறை இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் செயலாளராக பணியாற்றி வந்த ஆர்.சீத்தாலட்சுமி, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சொசைட்டி இயக்குநராகவும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளர் மகேஷ்வரி ரவிக்குமார், கால்நடைத்துறை இயக்குனராகவும், முன்னாள் சமூக சீர்திருத்தத்துறை செயலாளராக இருந்த டி.ஆபிரகாம், தொழில்நுட்ப கல்வி கழக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த மெர்சி ரம்யா, குழந்தைகள் வளர்ச்சி திட்டங்களின் இயக்குநராகவும், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக பதவி வகித்த வந்த பி.என்.ஸ்ரீதர், இந்து அறநிலையத்துறை ஆணையராகவும், இந்து அறநிலையத்துறை ஆணையராக இருந்த கே.வி.முரளிதரன், சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராகவும், கைத்தறி நெசவாளர் சொசைட்டி நிர்வாக இயக்குராக பணியாற்றி வந்த ஆனந்த குமார், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை கமிஷனராகவும், கடலூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த அருண் தம்பு ராஜ், தமிழ்நாடு சுகாதார திட்டங்களின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார திட்டங்களின் இயக்குநராக பணியாற்றி வந்த கோவிந்த ராவ், தமிழ்நாடு மின்னணு ஆணைய தலைவர் மற்றும் மின்னணு நிர்வாக இயக்குநராகவும், சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்(கல்வி) சரண்யா அரி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துத்துறை கூடுதல் இயக்குநராகவும், நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த ஜானி டாம் வர்கீஸ், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை திட்ட இயக்குநராகவும், சென்னை மெட்ரோபொலிட்டன் வளர்ச்சி ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த காயத்திரி கிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக இருந்த ஏ.சங்கர், நில சீர்திருத்தத்துறை இயக்குராகவும், கலை மற்றும் பண்பாட்டு துறை இணை இயக்குகர் சிவா சுந்தரவல்லி, தொழிற்சாலைகள் மற்றும் வணிகத்துறை கூடுதல் கமிஷனராகவும், சிவகங்கை மாவட்ட வருவாய் அதிகாரி மோகன சந்திரன், பேரிடர் மேலாண்மை துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். சோஷியல் மீடியா இயக்குனர் சுகுமார், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனராகவும், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கூடுதல் ஆணையர் பொற்கொடி, தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு கூடுதல் மேலாண் இயக்குநராகவும், உயர்கல்வித்துறை முன்னாள் செயலாளர் அ.கார்த்திக், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகத்தின் செயலாளராகவும், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறையின் சிறப்புச் செயலாளராக பணியாற்றி வந்த பி.சங்கர், தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண் இயக்குநராகவும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சிறப்பு செயலாளராக பதவி வகித்த வந்த மகேஷ்வரி, தமிழ்நாடு காதி மற்றும் கிராமப்புற தொழிற்சாலை வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பேரிடர் மேலாண்மை துறை இயக்குனராக பணியாற்றி வந்த எஸ்.ஏ.ராமன், தமிழக சாலை திட்டங்களின் திட்டஇயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அவர் சென்னை-கன்னியாகுமரி இன்டஸ்டிரியல் காரிடார் கூடுதலாக கவனிப்பார். டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ், தமிழக சிமென்ட் கழக நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக சிமென்ட் கழக நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக பணியாற்றி வந்த ஆர்.கண்ணன், எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனராகவும், தர்மபுரி மாவட்ட முன்னாள் கூடுதல் கலெக்டர் தீபனாவிஸ்வேஸ்வரி, எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் செயல் இயக்குனராகவும், டெக்ஸ்டைல் கமிஷனராக பதவி வகித்து வந்த வள்ளலார், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணை தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த தீபக் ஜேக்கப், கைத்தறி நெசவாளர் சொசைட்டி நிர்வாக இயக்குராகவும், பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த கற்பகம், சென்னை மெட்ரோபாலிட்டன் வளர்ச்சி ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை செயலாளராக இருந்த பி.அமுதா வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

உள்நாட்டு அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் வீரர், வீராங்கனைகளுக்கான பரிசுத் தொகையை அறிவித்தது பிசிசிஐ

பர்கூரில் தனியார் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பால் வியாபாரி