தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை..!!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையை தொடர்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தில் உள்ள மணல் ஒப்பந்ததாரர் எஸ்.ராமச்சந்திரனின் வீடு, நிஜாம் காலனியில் உள்ள அலுவலகம் உட்பட இடங்களில் 2வது நாளாக சோதனை நீடிக்கிறது. அவரது நண்பர் மணிவண்ணனின் வீடு ஆடிட்டர் முருகேசனின் அலுவலகம் உட்பட இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், பாதுகாப்போடு அமலாக்கத்துறையினர் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குலிங்கிறான் பட்டியில் உள்ள கரிகாலன் என்பவரது வீட்டிலும் இன்று சோதனையை விரிவுப்படுத்தியுள்ளனர். திண்டுக்கல் ஜிடிஎம் சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஹனிபா நகரில் உள்ள ரத்தினத்தின் மைத்துனர் கோவிந்தன் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனை நேற்றிரவு 11 மணியளவில் நிறைவுபெற்றது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே குமரிப்பாளையத்தில் உள்ள மணல் கிடங்கில் அமலாக்கத்துறையினர் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த மணல் குவாரியை புதுக்கோட்டையை சேர்ந்த எஸ்.ராமச்சந்திரன் ஒப்பந்தம் எடுத்துள்ளார். அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை எதிரொலியாக கரூரில் 2வது நாளாக அரசு மணல் குவாரி செயல்படவில்லை. காவிரி ஆற்றுக்குள் மணல் லாரிகள் வர முடியாதபடி பள்ளம் தோண்டியும், பேரிகார்ட் தடுப்பு வேலி அமைத்தும் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் கரூரில் மணல் சேமிப்பு கிடங்குகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

திருவானைக்காவல் மணல் குவாரியில் நேற்று காலையில் தொடங்கிய அமலாக்கத்துறை சோதனை இரவு 10 மணியளவில் நிறைவடைந்தது. இதில் நீர்வள ஆதாரத்துறை இளநிலை பொறியாளர் ஆறுமுகம், உதவி பொறியாளர் சாதிக் பாஷா, உதவியாளர் சத்தியராஜ் ஆகியோரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். நள்ளிரவு 2 மணி வரை விசாரணை செய்துவிட்டு பிறகு மூவரையும் விடுவித்தனர்.

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்