தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று(டிச.25) முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று(டிச.25) முதல் டிச.31ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை; தமிழக கடலோரப்பகுதிகள்: இன்று(டிச.25) முதல் டிச.29ம் தேதி வரை தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறது” என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை