தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (செப்.13) முதல் 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு (13.09.2024 மற்றும் 14.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2° – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று, நாளை, நாளை மறுநாள் என மூன்று நாட்களுக்கு சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வடமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது என்றும் தென்மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

ரூ60 லட்சம் வரி பாக்கி: நங்கநல்லூரில் 2 தியேட்டருக்கு சீல்

நிலத்தகராறில் பயங்கரம்: பீகாரில் 21 குடிசைகள் எரிப்பு: ராகுல், மாயாவதி கண்டனம்

கார் ஒர்க்‌ஷாப்பில் பயங்கர தீ விபத்து: ராமாபுரத்தில் பரபரப்பு