தமிழ்நாட்டில் முதல்முறையாக ஊட்டியில் பேட்டரியில் இயங்கும் படகு அறிமுகம்: 5 பேர் பயணிக்க ரூ.1200 கட்டணம்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லம் போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர். குறிப்பாக, ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். இவர்களின் வசதிக்காக தற்போது 100க்கும் மேற்பட்ட மிதி படகுகள், துடுப்பு மற்றும் மோட்டார் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சுற்றுலா துறை சார்பில் ஊட்டி ஏரியில் புதிதாக, தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக பேட்டரி மூலம் இயங்கும் ‘டோ நட்’ என்ற படகு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முற்றிலும் பேட்டரியால் இயங்கும் இந்த படகு மற்ற படகுகளை காட்டிலும் குறைந்த சத்தத்துடன் செல்கிறது. இதில் இணைக்கப்பட்டுள்ள பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால், மூன்று அல்லது நான்கு சவாரி மேற்கொள்ளலாம். இந்த படகில் 5 பேர் பயணிக்கலாம். வட்ட வடிவில் ஒரு டைனிங் டேபிள் போன்று அமைக்கப்பட்டுள்ள இந்த படகில் அமர்ந்தபடியே தேநீர் அருந்தலாம். சிற்றுண்டியும் உண்ணலாம். இந்த படகில் 5 பேர் பயணிக்க தற்போது ரூ.1200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் பயணிப்பவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் தேநீர் ஆகியவற்றை இலவசமாக சுற்றுலா துறை வழங்குகிறது. இந்த படகு தற்போது வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Related posts

டெல்லியில் நிமா என்ற தனியார் மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் சுட்டுக் கொலை

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டியில் நகைக்கடையில் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது