தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆன்லைன் மூலம் உடனடியாக கட்டிட அனுமதி: புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழகத்தில் முதன்முறையாக ஆன்லைன் மூலம் உடனடியாக கட்டிட அனுமதி பெறும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். 2024-25ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், சுயசான்றிதழ் மூலமாக பொதுமக்கள் கட்டிட அனுமதி பெறுவதற்கு புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2,500 சதுர அடி வரையுள்ள மனையிடத்தில், 3,500 சதுர அடி கட்டிட பரப்பளவிற்குள் தரைத்தளம் அல்லது தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட 7 மீட்டர் உயரத்திற்குட்பட்டு குடியிருப்பு கட்டிடத்தை கட்டுவதற்கு விரும்பும் பொதுமக்கள் சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டிட அனுமதியை எளிதாகவும் உடனடியாகவும் பெற முடியும்.

சுயசான்றிதழ் திட்டம் என்பது, பொதுமக்கள் கட்டிட அனுமதிக்காக அலுவலகங்களுக்கு சென்றுவரும் நேரத்தை முழுமையாக தவிர்த்து, அதிகபட்ச வெளிப்படைத் தன்மையுடனும், நடைமுறையில் உள்ள கட்டிட விதிகளை எளிமைப்படுத்தியும் மக்கள் கடைப்பிடிப்பதற்கு மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சி. தற்போதுள்ள ஒற்றைச் சாளர முறையின் மூலம் ஒப்புதல் பெறுவதை காட்டிலும், இந்த சுயசான்றிதழ் திட்டத்தில் ஒப்புதல் பெறும் நடைமுறை மிகவும் எளிதான வகையில் அமைந்து பொதுமக்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.

இது தொடர்பாக, ஒற்றைச் சாளர முறையில் சுயசான்றிதழ் திட்டத்திற்கான மென்பொருள் தொகுப்பு உருவாக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. தற்போது, குடியிருப்பு கட்டிடங்களுக்கான கட்டிட அனுமதி பெறுவதற்காக பெறப்படும் மொத்த விண்ணப்பங்களில் 72 விழுக்காடு ஊராட்சிகளிடம் இருந்தும், 77 விழுக்காடு பேரூராட்சிகளிடம் இருந்தும், 79 விழுக்காடு நகராட்சி மற்றும் மாநகராட்சிகளிடம் இருந்தும் பெறப்படுகிறது. அந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் ஒற்றைச் சாளர முறையில் பரிசீலனை செய்யப்படுகின்றன.

பொதுமக்கள் பயன்பெறும் வகையில், இப்புதிய திட்டத்தின் கீழ் அனுமதி பெறும் கட்டிடங்களுக்கும் சாலைக்கும் இடையில், தளர்வு (1.5 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது), கூராய்வுக்கட்டணம் (சதுர மீட்டருக்கு ரூ.2), உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுக்கான (I மற்றும் A) கட்டணங்கள் (சதுர மீட்டருக்கு ரூ.375) ஆகியவற்றில் விலக்கு அளிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் தேவையான கட்டணங்களை செலுத்தியபின் விரைவு துலங்கல் (QR) குறியீட்டுடன் கட்டிட அனுமதி மற்றும் வரைபடங்களை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், முன் இடக்கள ஆய்வு மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, உடனடியாக கட்டுமான பணி மேற்கொள்வதற்கும் வழிவகை செய்து கட்டிட முடிவு சான்று பெறுவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்படும்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் கீழ் இயங்கும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சார்பில் தமிழ்நாட்டில் முதன்முறையாக பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் நடுத்தர மக்கள் இணைய தளம் வாயிலாக சுயசான்றிதழ் அடிப்படையில் அதிகபட்சம் 2,500 சதுர அடி பரப்பளவு கொண்ட மனையிடத்தில் 3,500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு உடனடியாக ஒற்றைச் சாளர முறையில் கட்டிட அனுமதிகளை பெறும் ஒருங்கிணைந்த புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்து, 10 பயனாளிகளுக்கு கட்டுமான அனுமதி ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் காகர்லா உஷா, நகர் ஊரமைப்பு இயக்குநர் கணேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* 2,500 சதுர அடி வரையுள்ள மனையிடத்தில், 3,500 சதுர அடி கட்டிட பரப்பளவிற்குள் தரைத்தளம் அல்லது தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட 7 மீட்டர் உயரத்திற்குட்பட்டு குடியிருப்பு கட்டிடத்தை கட்டுவதற்கு விரும்பும் பொதுமக்கள் சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டிட அனுமதியை உடனடியாக பெற முடியும்.
* சுயசான்றிதழ் திட்டம் என்பது, பொதுமக்கள் கட்டிட அனுமதிக்காக அலுவலகங்களுக்கு சென்றுவரும் நேரத்தை முழுமையாக தவிர்த்து, கட்டிட விதிகளை எளிமைப்படுத்தியுள்ள புதுமையான முயற்சி.

Related posts

சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது

மேற்குவங்கத்தில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்