தமிழ்நாட்டில் 10 இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா: அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டி

மதுரை: தமிழ்நாட்டில் சென்னை, ஓசூர், கோவை உள்ளிட்ட 10 இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ‘கனெக்ட் மதுரை 2023’ தகவல் தொழில் நுட்பத்துறை வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டான்சிம் சிஇஓ சிவராஜா ராமநாதன், தகவல் தொழில் நுட்பத்துறையின் ஒன்றிய, மாநில அதிகாரிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

கருத்தரங்கம் முடிந்த பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது: புதிய தொழில் முனைவோருக்கு தமிழக அரசின் சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்படுகிறது. தமிழக அரசின் தொழில் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கொரோனா காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வேலை இழப்பு ஏற்பட்டது. இருந்தாலும் தமிழ்நாட்டில் சென்னை போன்ற இடங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சியுடன் செயல்பட்டன. மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் புதிய நிறுவனங்கள் செயல்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை, ஓசூர், கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 10 இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சிக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை விரைவில் வெளியிட உள்ளார். கங்கைகொண்டான், நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொய்வின்றி செயல்படுத்தப்படும். மதுரையில் ரூ.600 கோடியில் அறிவிக்கப்பட்ட எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா திட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. இதனால் அத்திட்டம் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு: மண்டபம் மீனவர்களுக்கும் மிரட்டல்

நிர்வாண சாதுக்கள் ஆன்மிக நடைபயணம்

‘கூடிய விரைவில் இணைவோம்’