தமிழகத்தில் இன்று முதல் ஆக. 13ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

டெல்லி: தமிழகத்தில் இன்று முதல் ஆக. 13ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூலை முதல் வாரம் வரை தமிழகத்தில் வெயில் வாட்டி எடுத்த நிலையில், தற்போது பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. எனவே வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை மத்திய இந்தியா வரை உள்ள நிலப்பரப்புக்கு ஆண்டின் மொத்த மழைப்பொழிவில் 70%ஐ கொடுக்கும். எனவே இதனை நம்பி கோடிக்கணக்கான விவசாயிகள் இருக்கின்றனர். தமிழ்நாட்டை பொறுத்த வரை கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி நேற்று வரை 72% கூடுதலாக மழை பொழிவை தென்மேற்கு பருவமழை கொடுத்திருக்கிறது. இந்த காலங்களில் ஒட்டுமொத்தமாக சராசரியாக 140.4 மி.மீதான் மழை பொழிந்திருக்க வேண்டும். ஆனால் 240.8 மி.மீ மழை பெய்திருக்கிறது.

அதிகபட்சமாக நீலகிரியில் 1019.9 மி.மீ, கோவையில் 756.9 மி.மீ என மழை பெய்திருக்கிறது. குறைந்தபட்சமாக தூத்துக்குடியில் 12.9 மி.மீ, நாகப்பட்டினத்தில் 77.4 மி.மீ என மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட தலா -33, -20 சதவிகிதம் குறைவாகும். இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் ஆக. 13ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதன்படி தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு 7 – 11 செ.மீ அளவுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் நாளை முதல் ஆக. 14ம் தேதி வரை கேரளாவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தெற்கு உள் கர்நாடகா, ராயலசீமா, கடலோர ஆந்திரா ஆகிய பகுதிகளுக்கும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பெண் மருத்துவர்கள் இரவில் பணி செய்யக்கூடாது என கூற முடியாது: உச்சநீதிமன்றம் கருத்து

முன்னோக்கி சிந்தித்தவர் பெரியார்: கமல்ஹாசன் பதிவு

கட்டாய ஆரம்பக்கல்வியை அறிமுகம் செய்த டி.எஸ்.சௌந்தரம் அம்மையார்