தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன் : சட்டப்பேரவையில் பட்டியலிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களில் பல லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஒவ்வொரு முறை நான் கையெழுத்து போடும் போதும், இதனால் பயன்பெறப்போகும் இலட்சக்கணக்கான மக்களின் முகங்களைப் பார்க்கிறேன். சில திட்டங்களின் பெயரைச் சொல்லி, இதன் மூலமாக எத்தனை இலட்சம் பேர் பயனடைந்திருக்கிறார்கள் என்று எனது செயலாளர்களிடம் கேட்டேன். அவர்களின் பதில் எனக்கு மகிழ்ச்சி அளித்தது.

*மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை, “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை”யாக ஒரு கோடியே 15 லட்சத்து 16 ஆயிரத்து 292 மகளிர் பெறுகிறார்கள்.

*”விடியல்” பேருந்து பயணத் திட்டம் மூலமாக 445 கோடி முறை பயணித்து பெண்கள் பயனடைந்து இருக்கிறார்கள்.

*”மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தால் பயனடைந்தவர்கள் ஒரு கோடி பேர்.

*முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் 16 லட்சம் பிள்ளைகள் வயிறார உணவு உண்கிறார்கள்.

*நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்கள் 13 லட்சத்து 12 ஆயிரம் பேர். கூட்டுறவுக் கடன் தள்ளுபடி பெற்றவர்கள் 1 லட்சம் பேர்.

*மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் “புதுமைப் பெண்” திட்டப்படி 2 ஆண்டுகளுக்கு, 4 லட்சத்து 81 ஆயிரத்து 75 மாணவிகள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள்.

*’நான் முதல்வன்’ திட்டத்தில் 2 ஆண்டுகளில், 28 லட்சம் இளைஞர்கள் பயனடைந்துள்ளார்கள்.

*’இல்லம் தேடி கல்வித் திட்டத்தில்’ 24 லட்சத்து 86 ஆயிரம் பள்ளிப் பிள்ளைகள் பயனடைந்திருக்கிறார்கள்.

*62 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் புதிய குடிநீர் இணைப்பை பெற்றுள்ளது.

*2 லட்சம் உழவர்கள் புதிய மின் இணைப்பு பெற்றுள்ளார்கள்.

*உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை 30 லட்சம் முதியோர் மாதந்தோறும் பெறுகிறார்கள்.

*உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை 5 லட்சம் மாற்றுத்திறனாளிகள் மாதந்தோறும் பெறுகிறார்கள்.

*கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தால் பயனடைந்தவர்கள் 42 லட்சத்து 33 ஆயிரம் பேர்.

*முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீடு தொகை உயர்ந்த பிறகு பயன்பெற்றவர்கள் 20 லட்சத்து 55 ஆயிரம் பேர்.

*மீன்பிடி கால உதவித்தொகை பெற்றவர்கள் 4 லட்சத்து 86 ஆயிரம் பேர். மீன்பிடி இல்லாதகால உதவித்தொகை பெற்றவர்கள் 5 லட்சத்து 15 ஆயிரம் பேர்.

*’நம்மைக் காக்கும் 48′ திட்டத்தால் பயனடைந்தவர்கள் 2 லட்சம் பேர்.

*முதல்வரின் முகவரி திட்ட’த்தினால் பயனடைந்தவர்கள் 19 லட்சத்து 69 ஆயிரம் பேர்.

*’மக்களுடன் முதல்வர் திட்ட’த்தின் மூலமாக, 3 லட்சத்து 40 ஆயிரம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டு உள்ளது.

*சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட 45 லட்சம் குடும்பங்களுக்கு 6 ஆயிரம் மற்றும் ஆயிரம் என நிவாரணத் தொகை வழங்கி இருக்கிறோம்.

*அதுமட்டுமல்ல, இந்த 33 மாதங்களில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று 6 ஆயிரத்து 569 கோடியே 75 இலட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிகளை இலட்சக்கணக்கான மக்களுக்கு வழங்கியுள்ளேன்,” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: தவெக தலைவர் விஜய்

ஹத்ராஸ் நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சாமியாரின் உதவியாளர் கைது

திருச்சி மாவட்டம் பாடாலூர் அருகே இன்று அதிகாலை விபத்து: காரில் பயணித்த பெண் பலி