தமிழகத்தில் முதன்முறையாக அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை: ரூ.6 கோடியில் சிகிச்சை மையம்; இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது; முதல்கட்டமாக 50 ஏழை பெண்களுக்கு சிகிச்சை

திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றது முதல் தேர்தல் வாக்குறுதிகள் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக சுகாதாரத்துறைக்கு மக்களை தேடி மருத்துவம், தொழிலாளர்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 போன்ற திட்டங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இதன் அடுத்த மைல்கல்லாக தமிழ்நாட்டில் முதல் முறையாக அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மையம் இன்று திறக்கப்பட உள்ளது. இந்தியாவில் குழந்தையின்மை பிரச்னையால் சுமார் 2.75 கோடி தம்பதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நகர்புறப்பகுதிகளில் 6 தம்பதிகளில் ஒரு தம்பதி குழந்தையின்மை பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர் என ஆய்வு தெரிவிக்கிறது.

குறிப்பாக தமிழகத்தில் தற்போது குழந்தையின்மை பிரச்னை தம்பதிகளிடம் அதிகரித்து வருகிறது. வசதியுள்ளவர்களும், கடன் வாங்கி வைத்தியம் பார்க்கும் நடுத்தர வர்க்கத்தினரும் ஓரளவுக்கு இச் சிகிச்சைகளை மேற்கொண்டு குழந்தை பெறுகின்றனர். ஆனால், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள ஏழைத் தம்பதிகள் அரசு மருத்துவமனைகளை மட்டுமே நம்பியுள்ளனர். எனவே அரசு மருத்துவமனைகளில் இந்த வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தும் திட்டம் ஆலோசிக்கப்பட்டு வந்தது.

ஆனால் இதை அமல்படுத்துவதற்கு அதிக நிதி செலவாகும் என்பதால் செயலாக்கம் பெறாமலே இருந்தது. இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் பல்வேறு மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு கடந்த ஆண்டு தமிழக அரசு தனது நிதிநிலை அறிக்கையில் அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்படும் என அறிவித்தனர். அதன்படி, முதல்கட்டமாக சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் சுமார் 6 கோடி ரூபாயில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஐ.வி.எப் எனப்படும் சிகிச்சை முறை செய்யப்பட இருக்கிறது. இதற்கு தேவையான அனைத்து கருவிகளும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனை இயக்குநர் கே.கலைவாணி கூறியதாவது: செயற்கை கருத்தரிப்பு மையம் திறக்கப்பட்ட உடன் முதல்கட்டமாக 50 பேருக்கு இந்த சிகிச்சை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது புறநோயாளிகள் பிரிவில் முதல் அடுக்கு சிகிச்சையில் பலன் கிடைக்காத, இந்த சிகிச்சை மிகவும் தேவைப்படுபவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதற்காக இரண்டு கருவியலாளர்கள் சிறப்பு பயிற்சி பெற்று உள்ளனர். 30 வயது குறைவாக உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த சிகிச்சை வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி 3 முறை இந்த சிகிச்சை அளிக்கப்படும். தனியாருக்கு நிகராக அனைத்து கருவிகளும், வசதிகளும் இந்த மையத்தில் உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 2 லட்சதிற்கும் மேல் செலவாகும் நிலையில் இங்கு இலவசமாக செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். மேலும் அடுத்தகட்டமாக மதுரையில் இந்த செயற்கை கருத்தரிப்பு மையம் திறக்கப்படும் என தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: தமிழகத்தில் முதல்முறையாக செயற்கை கருத்தரிப்பு மையம் எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் திறக்கப்பட உள்ளது. இந்த சிகிச்சை உடைய விலை சற்று அதிகமாக இருக்கிறது. எனவே எழும்பூரில் திறக்கப்படும் செயற்கை கருத்தரிப்பு மையத்தின் வெற்றிவிகிதம் எவ்வாறு உள்ளது என்பதை அறிந்த பிறகு அடுத்தகட்டமாக மதுரையில் திறக்கப்படும். முதல்வர் காப்பீடு உள்ள தம்பதியினருக்கு இந்த சிகிச்சையில் முன்னுரிமை வழங்கப்பட்டு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* ஐ.வி.எப். சிகிச்சை என்றால் என்ன?
இயற்கையாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்கள் மருத்துவ உதவியுடன் குழந்தைப் பெற்றுக் கொள்வது செயற்கை கருத்தரிப்பு முறை என கூறப்படுகிறது. இதில் ஐ.வி.எப் (IVF IN VITRO FERTILIZATION) சிகிச்சை முறையே அதிகம் மேற்கொள்ளப்படும் சிகிச்சை ஆகும். ஐ.வி.எப் என்பது ஆணின் விந்தணுக்களை ஆய்வகத்தில் சேகரித்து, அதில் வளமான விந்துணுக்களை தரம் பிரித்து அவற்றை பெண்ணின் கருப்பைக்குள் செயற்கையாக செலுத்தும் சிகிச்சை முறையாகும்.

குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் என்ன?
* திருமணத்தை தள்ளிப்போடுதல்
* உணவுப் பழக்கவழக்கம்
* அதிக மனஅழுத்தம்
* போதை, மது மற்றும் புகையிலைக்கு அடிமை
* ஹார்மோன் பிரச்னைகள்
* தைராய்டு குறைபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன.

Related posts

டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நீர்வீழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி: 3 பேர் மாயம்

18 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்