தமிழகத்தில் காலியாக உள்ள 2,553 டாக்டர் பணியிடம் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக கூட்டரங்கில் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் 59வது மருத்துவ பட்டப்படிப்பு நிறைவு விழாவில் கலந்து கொண்டு மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். தொடர்ந்து அவர் மேடையில் பேசியதாவது: அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிதாக பி.எஸ்.சி – ஊடுகதிரியல் (இளங்கலை மற்றும் முதுகலை), பி.எஸ்.சி -இருதயவியல், பி.எஸ்.சி – பார்வை அளவியல், பி.எஸ்.சி – சிறுநீர் பிரித்தல் தொழில்நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டு இம்மருத்துவமனை முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுகிறது.

மேலும் இம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்னொரு சிறப்புக்குரிய ஒன்று, தீக்காய அறுவை சிகிச்சைக்கென தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள். அதுமட்டுமின்றி ரூ.196.66 கோடி மதிப்பீட்டில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் (JICA) புதிய டவர் பிளாக் கட்டிடம், ரூ.125 கோடி மதிப்பீட்டில் டவர் பிளாக் 2 கட்டிடம், ரூ.21 கோடி மதிப்பீட்டில் சீமாங்க் கட்டிடம் போன்ற கட்டிடங்கள் கட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளிலே அதிக நிதி ஒதுக்கப்பட்டு இம் மருத்துவக் கல்லூரி மருத்துவ கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. தற்போது 2,553 மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு பத்திரிகைச் செய்திகளில் விளம்பரம் தரப்பட்டு, மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் மூலம் விரைவில் நிரப்பப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் நாராணயசாமி, மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துச்செல்வன், கலைஞர் நூற்றாண்டு அரசு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி, துணை முதல்வர் மரு.செந்தில்குமாரி, மருத்துவமனை கண்காணிப்பாளர், நிலைய மருத்துவ அலுவலர், மருத்துவப் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

நடப்பாண்டில் இயற்கை பேரிடர்களால் 1,492 பேர் பலி

இஸ்ரேலுக்கு பக்க பலமாக நிற்போம் என அமெரிக்கா சூளுரை … இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க தூதரகம் எச்சரிக்கை!!

மகாளய அமாவாசை : மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!!