தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறைக்கு நிர்ப்பந்தமின்றி ஒன்றிய அரசு நிதி விடுவிக்க வேண்டும்: ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு.தியாகராஜன் அறிக்கை: கடந்த 2004ம் ஆண்டு முதல் சர்வசிக்‌ஷா அபியான் என்ற பெயரிலும், தற்போது சமக்ரசிக்‌ஷா அபியான் என்ற பெயரிலும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறைக்கு ஒன்றிய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீத நிதி ஒதுக்கி வருகிறது. இந்நிதியின் மூலம் ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு ஆசிரியர்களுக்கு சம்பளமும் மாணவர்கள் நலன் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போதைய கல்வியாண்டில், எஸ்எஸ்ஏ திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு ஒன்றிய அரசு 4 தவணைகளில் ₹2152 கோடி நிதி வழங்க வேண்டும். இதில், கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையில் முதல் தவணையான ₹573 கோடியை இதுவரை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை.

இந்தியாவிலேயே கல்வியில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்துக்கு முதல் தவணை தொகை வழங்காததை ஒன்றிய அமைச்சர் தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் சந்தித்து கேட்டபோது, ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். பிஎம் திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். அப்படி செய்தால்தான் நிதியை உடனடியாக விடுவிக்க முடியும் என்று ஒன்றிய அமைச்சர் கூறியிருப்பதாக தெரியவந்தது. இதற்கு எங்களது சங்கம் கண்டனம் தெரிவிக்கிறது. தமிழ்நாட்டுக்கு தனியே கல்வி கொள்கையை உருவாக்க ஒரு குழு அமைத்து, அக்குழுவின் பரிந்துரையை விரைவில் தமிழக அரசு அமல்படுத்த இருக்கிறது. இந்நிலையில், தமிழக கலாசாரம், பண்பாட்டுக்கு எதிரான ஒன்றிய அரசின் தேசிய கல்வி கொள்கையையோ, பிஎம் பள்ளியையோ எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறைக்கு இனியும் ஒன்றிய அரசு நிதியை விடுவிக்காமல் காலம் தாழ்த்தினால், 20 ஆயிரம் பேர் பாதிக்கப்படும் சூழல் உருவாகும். தேசிய கல்வி கொள்கையை ஏற்று கொண்டால் மட்டுமே நிதியை விடுவிக்க முடியும் என்ற ஒன்றிய அரசின் வாதம் ஏற்புடையதல்ல. தமிழ்நாட்டுக்கான நிதியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். ஒன்றிய அரசின் நடவடிக்கையை பொறுத்து, அனைத்து ஆசிரியர்களையும் ஒன்றுதிரட்டி ஒன்றிய அரசை கண்டித்து போராட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் அறிவிப்போம்.

Related posts

ஒன்றிய அரசின் உண்மை சரிபார்ப்புக் குழுவை ரத்து செய்து மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தேசிய ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

உள்ளத்தில் உள்ள குறைபாடுகளைத் தூக்கி எறியுங்கள் வெற்றி உங்கள் வசமாகும்!