தமிழகத்தில் 5 சிட்டிங் எம்பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு? தொகுதிக்கு 3 பேர் பட்டியலுடன் டெல்லியில் செல்வப்பெருந்தகை முகாம்: இன்று மாலை வெளியாகிறது காங்.,வேட்பாளர் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அனல் பறக்கும் நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளது. திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது. அதில் 11 புதுமுகங்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று மற்ற கட்சிகளும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து விட்டன. இதற்கிடையே திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 9 தொகுதிகளிலும் புதுச்சேரி ஒரு தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிடுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 9 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களில் வென்றது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளிலும் வென்றாக வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.

இதனால் வலுவான வேட்பாளர்களை தமிழகத்தில் அறிவிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி, வேட்பாளர்கள் தேர்வை கட்சி தலைமை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் இருந்து விருப்ப மனுக்களை காங்கிரஸ் கட்சி பெற்றது. இவற்றில் இருந்து முக்கிய நிர்வாகிகளை தேர்வு செய்வது குறித்து மேலிட பொறுப்பாளர்களுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆலோசனை நடத்தி வந்தார். இதை தொடர்ந்து 9 தொகுதிகளுக்கும் 3 பேர் கொண்ட பட்டியலை தயார் செய்து, இந்த பட்டியலுடன் நேற்று செல்வப்பெருந்தகை டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு காங்கிரஸ் தேர்வுக்குழுவினரை இன்று சந்தித்து வேட்பாளர் பட்டியலை இறுதி செய்கிறார். இதையடுத்து இன்று மாலை அல்லது இரவுக்குள் தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் தலைமை வெளியிட உள்ளது. இந்த பட்டியலில், சிட்டிங் எம்பிக்கள் 5 பேருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அதிலும் மாற்றம் இருந்தால் கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று காங்கிரசார் தெரிவிக்கின்றனர். அதே நேரம், இந்த தேர்தலில் புதிதாக காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள 3 தொகுதிகளுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அதாவது, கடலூர் தொகுதிக்கான 3 பேர் கொண்ட பட்டியலில் கே.எஸ்.அழகிரி, நாசே ராமச்சந்திரன், விஷ்ணு பிரசாத் ஆகியோர் இருப்பதாக கூறப்படுகிறது. மயிலாடுதுறை தொகுதிக்கான பட்டியலில் பிரவீன் சக்கரவர்த்தி, மணிசங்கர் அய்யர் மகள், டாக்டர் கலீல் ரகுமான் ஆகியோர் இருப்பதாக கூறப்படுகிறது. திருநெல்வேலி தொகுதிக்கான பட்டியலில் பீட்டர் அல்போன்ஸ், டாக்டர் பால்ராஜ், ரூபி மனோகரன் ஆகியோர் பெயர் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோன்று திருவள்ளூர் தொகுதி மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டாலும் சிட்டிங் எம்பியான ஜெயக்குமார் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் இந்த தொகுதிக்கான 3 பேர் கொண்ட பெயர் பட்டியலில் முன்னாள் எம்பியான விஸ்வநாதன், லெனின் பிரசாத், சசிகாந்த் செந்தில் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

Related posts

நாடாளுமன்றத்தில் வெளி விவகாரம் உள்பட 4 நிலைக்குழுக்களின் தலைவர் பதவி காங்கிரசுக்கு கிடைக்கும்

தனியார் பள்ளி ஆக்கிரமித்த ரூ.500 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு: பள்ளி நிர்வாகம் ரூ.23 கோடி செலுத்தாததும் அம்பலம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு: திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என பேட்டி