தமிழக காங்கிரஸ் உத்தேச வேட்பாளர் பட்டியல் திருத்தி வழங்கிய ராகுல்காந்தி: டெல்லியில் முகாமிட்டு நிர்வாகிகள் அழுத்தம்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. ஏராளமானோர் வாய்ப்பு கேட்பதால் சிட்டிங் எம்பிக்களுக்கும், அந்தந்த தொகுதியில் உள்ள மற்ற முக்கிய நிர்வாகிகளுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் வேட்பாளர்களை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நிலவுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விருப்ப மனு கொடுத்தவர்களின் மனுக்களை ஆய்வு செய்து, மேலிட பார்வையாளர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் அடங்கிய குழுவினர் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பேர் கொண்ட உத்தேச பட்டியலை தயார் செய்தனர். இதில் ஒரு வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்கும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடந்த 3 நாட்களாக டெல்லியில் முகாமிட்டு உள்ளார்.

நேற்று முன்தினம் முழுவதும் 3 கட்டமாக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் முதல் கட்டமாக தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் நிமிடத்துக்கு நிமிடம் வேட்பாளர் பெயர்கள் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு வரை 3 கட்டமாக ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, தமிழக மேலிட பார்வையாளர் அஜோய் குமார், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் மேலிட மூத்த தலைவர்கள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் சார்பில் புது முகங்களுக்கு வாய்ப்பளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு மேலிட தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சிட்டிங் எம்பிக்களில் யாருக்கெல்லாம் மக்கள் செல்வாக்கு இருக்கிறதோ அவர்களுக்கு வாய்ப்பு வழங்க ராகுல்காந்தி கூறியுள்ளார். இதையடுத்து, தமிழக காங்கிரஸ் சார்பில் மேலிடத்துக்கு வழங்கப்பட்ட உத்தேச வேட்பாளர் பட்டியல் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வேட்பாளர்களை இறுதி செய்வதில் டெல்லி தலைமைக்கும் தமிழக காங்கிரஸ் தலைமைக்கும் இடையே உடன்பாடு ஏற்படாததே தாமதத்திற்குக் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, பட்டியல் இறுதி செய்யப்பட்ட நிலையில், சிட்டிங் எம்பிக்களான சிவகங்கை- கார்த்தி சிதம்பரம், கரூர்- ேஜாதிமணி, விருதுநகர்-மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரி- விஜய்வசந்த் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் திருநெல்வேலி தொகுதிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இங்கு நாகர்கோவிலை சேர்ந்த ராபர்ட் புரூஸ் பட்டியலில் இடம்பிடித்தார். ஆனால் இதற்கு திருநெல்வேலி தொகுதி முக்கிய நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, களக்காட்டை சேர்ந்த பால்ராஜ் பெயர் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. கிருஷ்ணகிரி-கோபிநாத், கடலூர்- நாசே ராமச்சந்திரன், மயிலாடுதுறை- விஷ்ணுபிரசாத், திருவள்ளூர்- விஸ்வநாதன் அல்லது சசிகாந்த் செந்தில் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக சீட் கேட்கும் எல்லோருமே டெல்லியில் முகாமிட்டு அவரவர்களுக்கு நெருக்கமான தலைவர்கள் மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். இதனால் பட்டியலில் இடம்பிடித்தவர்கள் பெயர் அடுத்த சில மணி நேரங்களில் மாற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அநேகமாக இன்று தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை எதிர்பார்க்கலாம் என காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

 

Related posts

மதுராந்தகம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்

அணுக் கனிம சுரங்க திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

தேர்தல் பத்திர வழக்கு: மறு ஆய்வு மனு தள்ளுபடி