சிறு தொழில் அமைப்பின் தமிழ்நாடு தலைவர் பதவி விவகாரம் ரூ.4 கோடி கொடுத்து பொறுப்பு வாங்கிய நடிகை நமீதா கணவர்: ரூ.41 லட்சத்தை இழந்தவர் புகாரால் பரபரப்பு ஒன்றிய அரசு பெயரில் மெகா மோசடி அம்பலம்

சேலம்: சேலத்தில் எம்எஸ்எம்இ புரமோசன் கவுன்சில் தமிழக தலைவர் பதவி தருவதாக கூறி தன்னிடம் ரூ.41 லட்சத்தை ஏமாற்றி விட்டு ரூ.4 கோடி பெற்றுக்கொண்டு நடிகை நமீதாவின் கணவருக்கு பொறுப்பு வழங்கியதாக பைனான்சியர் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். சேலத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் எம்எஸ்எம்இ புரமோசன் கவுன்சில் என்ற அமைப்பு சார்பில் சிறு தொழில் செய்வதற்கு ஒன்றிய அரசிடம் இருந்து கடன் பெற்றுத் தருவதாக கூறி கூட்டம் ஒன்று நடந்தது. இதில், இந்த அமைப்பின் தேசிய தலைவரான மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த முத்துராமன் (60), செயலாளரான பஞ்சாப்பை சேர்ந்த துஷ்யந்த் யாதவ் (34), தமிழ்நாடு சேர்மனான நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் முத்துராமன் அரசு சின்னத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், இவர் ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும் புகார் வந்தது. இது தொடர்பாக சூரமங்கலம் போலீசார் முத்துராமன், துஷ்யந்த்யாதவ் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது சேலம் ஜாகீர்அம்மாபாளையத்தை சேர்ந்த பைனான்சியர் கோபால்சாமி(45), சேலம் சூரமங்கலம் போலீஸ் ஸ்டேசனில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: சேலத்தில் உள்ள மகளிர் சுயஉதவி குழுவிற்கு கடன் கொடுத்து வசூல் செய்யும் தொழில் செய்து வருகிறேன். எனக்கு மதுரை வக்பு போர்டு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் மூசா முபாரக் அறிமுகம் கிடைத்தது. அவர் மதுரையை சேர்ந்த முத்துராமன் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். முத்துராமன் எம்எஸ்எம்இ நேசனல் புரமோசன் கவுன்சில் சேர்மனாக இருப்பதாக கூறினார். அப்போது அவரது காரில் தேசிய கொடியும், அசோக முத்திரையும் இருந்தது. சேர்மன் எம்எஸ்எம்இ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரது விசிட்டிங் கார்டிலும் அசோக முத்திரை பதித்து டாக்டர் முத்துராமன், எம்எஸ்எம்இ நேசனல் புரமோசன் கவுன்சில் சேர்மன் இந்தியா என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனால் அவர் ஒன்றிய அரசில் முக்கிய பதவியில் இருப்பதாக கருதினேன். முத்துராமனையும் சந்தித்து பேசினேன். இதற்கிடையில் சென்னையில் கடந்த ஜூன் மாதம் எம்எஸ்எம்இ புரமோசன் கவுன்சில் நிகழ்ச்சி நடப்பதாகவும், இதில் தொழில்முனைவோரை அழைத்து வருமாறும் கூறினார். இதையடுத்து சேலத்தில் இருந்து 25 பேரை சென்னைக்கு அழைத்துச் சென்றேன். எனக்கு தமிழ்நாடு கவுன்சில் சேர்மன் பதவி வாங்கித் தருவதாகவும் அதற்காக ரூ.3 கோடி வேண்டும் என்றும் கேட்டார். பின்னர் ரூ.50 லட்சம் கேட்டார். கடந்த ஜூலை மாதம் சேலம் வந்து கொண்டிருப்பதாகவும் ரூ.50 லட்சத்தை திருவாகவுண்டனூர் பகுதிக்கு கொண்டு வருமாறும் கூறினார். அப்போது என்னிடம் இருந்த ரூ.31 லட்சத்தை கொடுத்தேன். அதனை வாங்கிய முத்துராமன், அருகில் இருந்த துஷ்யந்த் யாதவிடம் கொடுத்தார். மீதமுள்ள பணத்தை எவ்வளவு சீக்கிரம் கொடுக்கிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் சேர்மன் பதவியை பெறலாம் என ஆசைவார்த்தை கூறினார். இதனால் எனது வங்கி கணக்கில் இருந்து முத்துராமன் கொடுத்த 5 வங்கி கணக்கிற்கு ரூ.19 லட்சத்தை அனுப்பி வைத்தேன். மொத்தம் ரூ.50 லட்சத்தை பெற்றுக்கொண்டு, பதவியை தராமல் காலம் கடத்தி வந்தார்.

பின்னர் நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரியிடம் ரூ.4 கோடியை பெற்றுக்கொண்டு தமிழக சேர்மன் பதவியை கொடுத்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் நான் கொடுத்த ரூ.50 லட்சத்தை திரும்பத் தருமாறு கேட்டேன். ஆனால் ரூ.9 லட்சம் மட்டுமே கொடுத்தனர். மீதமுள்ள ரூ.41 லட்சத்தை தராமல் ஏமாற்றி விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதையடுத்து முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். இந்த புகாரின் அடிப்படையில், நடிகை நமீதாவின் கணவரும் ரூ.4 கோடி கொடுத்து ஏமாந்து போனது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். பணம் கொடுத்து ஏமாந்து போனது உண்மைதானா? இந்த பதவி ஒன்றிய அரசு பதவி என நினைத்து ஏமாந்து போனாரா? எனவும் விசாரணை நடக்க இருக்கிறது. நடிகை நமீதா பாஜ மாநில செயற்குழு உறுப்பினராக முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அதே நேரத்தில் முத்துராமன் மத்திய அரசில் முக்கிய பொறுப்பில் இருப்பதாக கூறியுள்ளார். எனவே இந்த மோசடியில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முத்துராமனிடமும், துஷ்யந்த் யாதவிடமும் போலீசார் விசாரணை நடத்தியபோது, நடிகை நமீதாவும், அவரது கணவர் சவுத்ரியும் போலீசுக்கு தெரியாமல் ஓட்டலில் இருந்து வெளியேறினர். சவுத்ரி தமிழக தலைவர் பதவியில் இருப்பதால் மோசடியில் ஏதாவது தொடர்பு இருக்குமா? என்ற சந்தேகத்தின்பேரிலும் விசாரணை நடந்து வருகிறது.

Related posts

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை