தமிழ்நாட்டில் போர்டு நிறுவனம் மீண்டும் கார் உற்பத்தி தொடங்க வேண்டும்: சிகாகோவில் உயர் அதிகாரிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: அமெரிக்க நாட்டின் சிகாகோவில், உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான போர்டு நிறுவனத்தின் உயர் அலுவலர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை மீண்டும் மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். அப்போது, 30 ஆண்டுகளாக நட்புறவுடன் இணைந்து செயல்பட்டதாக குறிப்பிட்டார். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த பயணத்தின்போது, முதல்வர் முன்னிலையில் அமெரிக்க நாட்டின் சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் சிகாகோவில் போர்டு நிறுவனம் மற்றும் ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

அப்போது, தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அதன்படி, போர்டு நிறுவனம் உலகெங்கிலும் செயல்படும் இரண்டாவது பெரிய அமெரிக்க ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகும். போர்டு மோட்டார் நிறுவனம் அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள டியர்பார்னை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. போர்டு அதன் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் வணிக தீர்வு மையத்தை சென்னையில் கொண்டுள்ளது, போர்டு மோட்டார் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்களது உலகளாவிய திறன் மையத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இச்சந்திப்பு நிகழ்ச்சியில், போர்டு நிறுவனத்தின் IMG தலைவர் கே ஹார்ட், துணைத்தலைவர் (சர்வதேச அரசாங்க விவகாரங்கள்) மேத்யூ கோட்லெவ்ஸ்கி, போர்டு இந்தியா இயக்குநர் (அரசாங்க விவகாரங்கள்) டாக்டர் ஸ்ரீபாத் பட் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். அதேபோன்று, ஐடிசர்வ் கூட்டமைப்பு அமெரிக்காவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களின் மிகப்பெரிய கூட்டமைப்பாகும். இந்த கூட்டமைப்பானது 2,400 உறுப்பினர் நிறுவனங்களுடன் 23 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இது வணிக-நட்பு கொள்கைகளுக்காக சட்டரீதியாக துணை புரிகிறது, நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை வளர்க்கிறது மற்றும் CSR மற்றும் STEM முயற்சிகள் மூலம் உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துகிறது.

ஐடிசர்வ் கூட்டமைப்பு உயர்திறமை பணியாளர்களின் குடியேற்றத்திற்கு சட்ட உதவிகளை புரிகிறது. ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். அப்போது, ஐடிசர்வ் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஜெகதீஸ் மொசாலி, இயக்குநர்கள் சிவ மூப்பனார், சம்ப மொவ்வா, சிகாகோ பிரிவு தலைவர் சதீஷ் யலமஞ்சிலி மற்றும் உயர் அலுவலர்களை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டில் திறன்மிகுந்த இளைஞர்களுக்கு வேலைவாயப்பு அளித்திட தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் விஷ்ணு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சமூக வலைதள பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘தமிழகத்தில் போர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்குவது பற்றி அந்நிறுவன குழுவினருடன் சிறப்பான முறையில் ஆலோசனை நடந்தது. 30 ஆண்டுகளாக தமிழகத்துடன் நட்புறவுடன் இணைந்து செயல்பட்டு வந்த அந்நிறுவனத்தின் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியங்கள் பற்றி அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடந்தது’’ என பதிவிட்டுள்ளார். சென்னை மறைமலைநகரில் நடந்து வந்த கார் உற்பத்தியை கடந்த 2022ம் ஆண்டுடன் அந்நிறுவனம் நிறுத்தி விட்டது. அதனை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வருவதற்கான முயற்சியாக இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை மறைமலைநகரில் நடந்து வந்த கார் உற்பத்தியை கடந்த 2022ம் ஆண்டுடன் போர்டு நிறுவனம் நிறுத்தி விட்டது. அதனை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வருவதற்கான முயற்சியாக இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

Related posts

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன்: போக்சோ சட்டத்தில் கைது

வங்கியில் அடகு வைத்துள்ள நகையை மீட்டு தருவதாக கூறி நகை கடை உரிமையாளர்களை ஏமாற்றி பல லட்சம் அபேஸ் செய்த வாலிபர்: ஆன்லைன் ரம்மி விளையாட கைவரிசை