தேச நலனில் ஒரு போதும் சமரசம் கிடையாது.. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக நடத்திய ஆட்சி வெறும் டிரெய்லர்தான் : பிரதமர் மோடி

டெல்லி : இந்திய அரசியல் வரலாற்றில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக்கு இவ்வளவு பெரிய வெற்றி இதுவரை கிடைத்ததில்லை என்று தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் உரை நிகழ்த்திய மோடி,”வெற்றிக்காக பாடுபட்ட கூட்டணி கட்சி தலைவர்களுக்கு தலை வணங்குகிறேன். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். என்.டி.ஏ. கூட்டணி நாடாளுமன்ற கட்சி தலைவராக என்னை ஒருமனதாக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. இன்று எனக்கு மிகவும் உணர்ச்சி மயமான நாள். இந்திய வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான ஒரு கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி. நாடு முழுவதும் உள்ள மாநிலங்களின் ஒரு அங்கம்தான் தேசிய ஜனநாயக கூட்டணி. நாங்கள் இதுவரை தோற்றதும் இல்லை. இனி தோற்கப் போவதும் இல்லை.

நாடு முழுவதும் 22 மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளனர்; பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் 10 மாநிலங்களில் 7ல் நம் கூட்டணிக்கு அதிக ஆதரவு உள்ளது. தேசமே முதன்மை என்பது தான் இந்த கூட்டணியின் முதன்மைக் கொள்கை. இந்திய அரசியல் சாசனத்தின் அனைத்து மதமும் சமமானவை என்பதில் பாஜக கூட்டணி உறுதி கொண்டுள்ளது. தேச நலனில் ஒரு போதும் சமரசம் கிடையாது. பா.ஜ.க கூட்டணி அடுத்த 10 ஆண்டுகளுக்கு வளர்ச்சி சிறந்த நிர்வாகத்தில் புதிய அத்தியாயத்தை படைக்கும். சிறந்த நிர்வாகத்திற்கு மறுபெயர் தான் தேசிய ஜனநாயக கூட்டணி. தமிழ்நாட்டில் வெற்றி கிடைக்காவிட்டாலும் பா.ஜ.கவின் வாக்கு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழ்நாடு கூட்டணிக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். வருங்காலங்களில் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிர்காலம் சிறப்பாக உள்ளது கண்கூடாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. முதன்முறையாக கேரளாவில் பாஜக-வுக்கு வெற்றி கிடைத்துள்ளது. கேரளாவில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் தங்களை தியாகம் செய்துள்ளனர். கடவுள் ஜெகநாதரின் அருளால் முதல்முறையாக தேசத்தின் வளர்ச்சி என்ஜினில் இணைந்துள்ளது ஒடிசா.

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஆட்சியில் இருக்கும். நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டுசெல்ல கடுமையாக உழைக்கத் தயாராக இருக்கிறேன். இந்த தேர்தலில் வென்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தோற்றவர்களை விமர்சிப்பது, அவமதிப்பது நமது கலாசாரத்தில் இல்லை. குறிப்பிடத்தக்க வெற்றியை பெறாத எதிர்க்கட்சியினர் எதற்காக கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர் என தெரியவில்லை. அரசை நடத்த பெரும்பான்மை பலம் அவசியமில்லை; ஒருமித்த கருத்துதான் முக்கியம். என்னை பொறுத்தவரை நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் சமமானவர்கள் தான். கடந்த 10 ஆண்டுகளில் பாஜக நடத்திய ஆட்சி வெறும் டிரெய்லர்தான்.தேசிய ஜனநாயக கூட்டணி எப்போதும் ஊழல் இல்லாதது, சீர்திருத்தங்கள் கொண்டது.நாடாளுமன்றம் வரும் போது, எதிர்க்கட்சிகளும் தேசத்தின் வளர்ச்சியில் பங்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.,”இவ்வாறுத் தெரிவித்தார்.

 

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது