தமிழகத்தில் பல தொகுதியில் பாஜக டெபாசிட் இழக்கிறது: தோல்விக்கு பொறுப்பேற்று அண்ணாமலையின் மாநில தலைவர் பதவியை பறிக்க திட்டம்

சென்னை: தமிழகத்தில் பல தொகுதியில் பாஜக டெபாசிட் இழக்கிறது. தோல்விக்கு பொறுப்பேற்று அண்ணாமலையின் மாநில தலைவர் பதவியை பறிக்க டெல்லி மேலிடம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் புதிய நீதிக்கட்சி, ஐஜேகே, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், அமமுக, தமாகா, பாமக, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் பாஜக 19 தொகுதியில் போட்டியிட்டது.

மேலும் கூட்டணி கட்சி தலைவர்களான ஏ.சிசண்முகம், பாரிவேந்தர், தேவநாதன் யாதவ், ஜான்பாண்டியன் ஆகியோர் தாமரை சின்னத்தில் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் திருவள்ளூர், பெரும்புதூர், மதுரை, நீலகிரி உள்பட பல்வேறு தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் அளவுக்கு பின்தங்கியிருந்தது. மற்ற தொகுதிகளில் தொடர்ந்து பாஜக பின்னடைவை சந்தித்து வந்தது. பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட அனைத்து ஒன்றிய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், தேசிய தலைவர் முதல் மாநில தலைவர்கள் வரை தமிழகத்தில் வரிந்து கட்டிக்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அது மட்டுமல்லாமல் எந்த கட்சியும் வைக்காத அளவுக்கு தமிழகத்தில் மெகா கூட்டணி அமைத்தும் இவ்வளவு தான் வாக்குகள் வாங்க முடிந்ததா? என்று பாஜகவினர் கடும் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். அதே நேரத்தில் அண்ணாமலை மீது கடும் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். வேட்பாளர் தேர்வில் இருந்து அனைத்திலும் அண்ணாமலை தோல்வி அடைந்து விட்டார். அவர் தொகுதியில் மட்டுமே முழு வீச்சில் தேர்தல் பணியில் அவர் ஈடுபட்டார். மற்ற தொகுதிகளில் அவர் ஒரு பொருட்டாக கூட எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டை வைக்க தொடங்கியுள்ளனர்.

அதே நேரத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பாஜக தலைவர் அண்ணாமலை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற குரல் இப்போதே பாஜகவுக்குள் எழுந்துள்ளது. அதே நேரத்தில் டெல்லி தலைமையும் பாஜக தலைவர் அண்ணாமலை தான் அதிமுகவை கூட்டணிக்குள் வர விடாமல் தடுத்தார் என்று ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தது. இது போன்ற காரணங்களால் தேர்தலில் முடிந்ததும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பதவி பறிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்