தமிழ்நாட்டில் 68,000 வாக்குச்சாவடி மையங்கள்: டிசம்பருக்கு பிறகு 90,000 முதல் தலைமுறை வாக்காளர்கள் சேர்ப்பு; தேர்தல் செலவினங்களுக்கு ரூ.750 கோடி வரை அரசிடம் கேட்பு; தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் 68,144 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னை, தலைமைச்செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி சங்கர்லால் குமாவத், இணை தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீகாந்த், கூடுதல் காவல்துறை தலைவர்கள் மகேஷ்குமார், ஜெயராம், ஐஜி ரூபேஷ் குமார் மீனா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் வேட்பு மனு தாக்கலுக்கான ஏற்பாடுகள், பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிதல், அமைதியான முறையில் தேர்தல் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

முன்னதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அளித்த பேட்டி: நடாளுமன்ற தேர்தலுக்காக தமிழ்நாட்டில் 68,144 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தற்போது 18 -19 வயதுடைய வாக்காளர்களாக 10.55 லட்சம் பேர் உள்ளனர். இதில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்திற்கு பின் 90 ஆயிரம் முதல் தலைமுறை வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்ந்து உள்ளனர். தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சி விஜில்’ ஆப் மூலம் கடந்த 17ம் தேதி மட்டும் 141 புகார்கள் பெறப்பட்டது. இதில் சென்னையில் அதிகபட்சமாக 21 புகார்கள் பெறப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரம் அகற்றப்படாமல் இருப்பதாக கூறி அதிக புகார்கள் வந்துள்ளது. அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இதுதவிர, தேர்தல் விளம்பரம் தொடர்பாக கட்சிகள் சான்றிதழ் பெறவும் கூறியுள்ளோம். இதுவரை 18 அரசியல் கட்சிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஒரு தொகுதிக்கு 2 பேர் உள்ள நிலையில் அந்த எண்ணிக்கை உயரவும் வாய்ப்புள்ளது. பொது பார்வையாளர்கள் வேட்புமனு பரிசீலனைக்கு ஒரு நாள் முன்னதாக வருகை தருவார்கள். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒருவர் என்ற விதத்தில் 234 தொகுதிக்கு வீடியோ கண்காணிப்பு குழு நியமிக்கப்படுவார்கள்.

அதேபோல், தேர்தலையொட்டி ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்பு குழு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழு என 3 குழுக்களை வாகனங்களை கண்காணிக்கும் பணியில் அமைத்துள்ளோம். அதன்படி, தமிழகம் முழுவதும் 702 – பறக்கும் படையினரும், 702 – நிலையான கண்காணிப்பு குழுவினரும் மற்றும் 234 வீடியோ கண்காணிப்பு குழுவினரும் நியமித்துள்ளோம். இதனுடைய செயல்பாடுகள் அனைத்தையும் தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் பிரத்யேக அறை அமைக்கப்பட்டு கண்காணித்து வருகிறோம். ஒவ்வொரு குழுவிலும் 4 பேர் இருப்பார்கள். மேலும், மாவட்டத்தின் தேவையை பொறுத்து இந்த எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

மாவட்ட அளவில் உணவு பொருட்கள் செலவினத்துக்கான தொகையை நிர்ணயம் செய்துள்ளதால், மாவட்டத்திற்கு ஏற்ப இது வேறுபடும் வாய்ப்புகள் உள்ளன. விலை விவரத்தை ஆலோசித்து உரிய ஆணை பிறப்பிக்கப்படும். தேர்தல் செலவினங்களுக்காக ரூ.750 கோடி வரை தமிழக அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு தொகை ரூ.95 லட்சமாக உயர்ந்துள்ளது. நாம்தமிழர் மற்றும் மதிமுகவிற்கு சின்னம் இதுவரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அரசியல் கட்சிகள் நட்சத்திர பேச்சாளர்கள் பற்றி மார்ச் 27க்குள் விண்ணப்பித்து பெயரை பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

* வாக்காளர் குறை தீர்க்கும் மையம்
சென்னை, தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை 4வது தளத்தில் மாநில அளவிலான வாக்காளர் குறை தீர்க்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமில்லா இலவச எண் : 1800 – 4252 – 1950 அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்களில் வாக்காளர்கள் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான சந்தேகம் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம்.

* 6.22 கோடி வாக்காளர்கள்
கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த டிசம்பர் 9ம் தேதிக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 5 லட்சம் பேர் வரை விண்ணப்பங்கள் பெற்று கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் தற்போது 6.22 கோடியாக எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கடந்த 17ம் தேதியுடன் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில், இனி விண்ணப்பிப்பவர்களின் பெயர்கள் தேர்தலுக்குப்பின் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு