தமிழ்நாட்டின் 2வது அரசு பல் மருத்துவக்கல்லூரி திறப்பு சுகாதாரத்துறை வளர்ச்சி பற்றி எடப்பாடி தெரிந்து கொள்ளட்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி

புதுக்கோட்டை: ‘தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை வளர்ச்சியை பற்றி தெரிந்து கொள்ளட்டும்’ என்று எடப்பாடிக்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார். புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசால் ரூ.67.83 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாட்டின் 2வது அரசு பல் மருத்துவக்கல்லூரியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.8.89 கோடியில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதாரத்துறை கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

விழாவில் நேரில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: அதிமுக ஆட்சிக்காலத்தில் 120 மருத்துவமனைகள் எச்ஆர் என்ற மருத்துவ பணிகள் உருவாக்காமல் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அப்படி தரம் உயர்த்தினால் தரம் உயர்த்தியதாக அர்த்தம் அல்ல. பெயர் பலகை மட்டுமே மாட்டிக்கொள்ள முடியும். ஆனால் மருத்துவமனையை தரம் உயர்த்தி விட்டோம். இரண்டரை ஆண்டு காலமாக மருத்துவர்கள் தற்போதைய ஆட்சியாளர்கள் நியமிக்கவில்லை என்ற தவறான தகவலை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லி வருகிறார். இது எங்கள் கவனத்திற்கு வந்த பிறகு தற்போது அங்கு மருத்துவ பணியிடத்தை உருவாக்கி மருத்துவர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காலி பணியிடங்கள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டால் உடனடியாக காலி பணியிடங்கள் நிரப்பப்படும். சென்னை மாநகராட்சி ஆணையரின் உதவியாளர் காயமடைந்த விவகாரத்தில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்னவென்று தெரியாமல் பேசுகிறார். எதையும் தெரிந்து கொள்ளாமல் அறிக்கை விடுவது வருத்தத்துக்குரியது. காரில் சென்னைக்கும், சேலத்திற்கும் செல்லும் எடப்பாடி பழனிசாமி, வழியில் உள்ள சுகாதார நிலையங்களுக்கு சென்று பாம்புக்கடி, நாய்க்கடி மருந்துகள் இருக்கிறதா, அது எவ்வளவு நாட்கள் இருக்கிறது என்று கேட்டு தெரிந்து கொண்டு தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை வளர்ச்சியை பற்றி தெரிந்து கொள்ளட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

திருப்பாச்சூர் ஊராட்சியில் 100 நாள் வேலை வழங்காததால் பெண் தொழிலாளர்கள் மறியல்

மெட்ரோ ரயில், மாநகர பேருந்து உள்ளிட்ட அனைத்து வசதிகள் உள்ளதால் ஐ.டி. துறை பட்டதாரிகளுக்காக மாதவரத்தில் ஹைடெக் சிட்டி

செங்கல்பட்டு அருகே பரபரப்பு பள்ளியில் இருந்து மாணவன், மாணவி காரில் கடத்தல் ? போலீசார் தீவிர விசாரணை