2ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகம் பெயரில் தபால் அட்டை வெளியீடு: மாநகர காவல்துறை தகவல்

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம் தற்போது தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 28.9.2021ல் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தார்.

அருங்காட்சியகத்தை கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காவல் உயர் அதிகாரிகள், வெளிநாட்டவர்கள், பல்வேறு திரைத்துறையினர், தமிழக காவல்துறை, நீதித்துறை, ஆட்சிப்பணி உயர் அதிகாரிகள், காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவர்கள், பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் பார்வையிட்டுள்ளனர்.
தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் திறந்து 2 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இன்று மாலை, எழும்பூர், தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தில் விழா நடைபெற உள்ளது.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கடந்த 15 நாட்களாக, 9 பள்ளிகள் மற்றும் 14 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு, மாறுவேட போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி, பாட்டு போட்டி, ஓவியப்போட்டி, குறும்படம் காணொலி போட்டி, காவல் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்ற மாணவர்களுக்கு நடன போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

அதை தொடந்து இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் காவல் அருங்காட்சியகம் 2ம் ஆண்டு நிறைவு விழாவில் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குகின்றனர்.

அதைதொடர்ந்து தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தின் தபால் அட்டை மற்றும் சிறப்பு தபால் உறையை வெளியிடுகின்றனர். எனவே எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தின் 2ம் ஆண்டு நிறைவு விழாவில் பொதுமக்கள் கலந்த கொள்ளலாம் என்று சென்னை காவல்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்