தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆலோசனை கூட்டம்: கார்ப்பரேட் வர்த்தகத்தை அரசுகள் தடை செய்யவேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், கார்ப்பரேட் வர்த்தகத்தை மத்திய, மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் இசிஆர் சாலையொட்டி உள்ள ஒரு தனியார் ரிசார்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் வெள்ளையன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், 41வது மாநில மாநாட்டை வெற்றி மாநாடாக நடத்திய மாநில, மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கபட்டது. கார்ப்பரேட் ஆன்லைன் வர்த்தகத்தை ஒன்றிய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும், சில்லறை வர்த்தகத்தை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர், வணிகர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில், மாநில இளைஞரணி செயலாளர் சரவணன், பழைய பொருட்கள் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் 40 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அதனைத்தொடர்ந்து, மாநில பொது செயலாளர் சௌந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழநாடு அரசு உள்ளாட்சி துறையில் கட்டிட உரிமையாளர்கள் சொத்து வரி கட்டியிருந்தால் தான் லைசென்ஸ் புதுப்பிக்க முடியும் என்ற சட்டத்தை 2023ம் ஆண்டு கொண்டு வந்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டில், அனைத்து இடங்களிலும் கஞ்சா பெருக்கத்தால் வணிகர்கள் தாக்கப்பட்டு, வணிகர்கள் எந்த நேரம் என்ன நடக்கும் என்று பயப்படும் சூழ்நிலையில் வணிகம் செய்து கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டில், வணிகர் நல வாரியம் என்று ஒன்றை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியது. அந்த, வணிகர் நல வாரியம் செயல்படாமல் உள்ளது. இது போன்ற, நிகழ்வுகளை தமிழ்நாடு அரசு சரி செய்ய வேண்டும். இதை கண்டித்து, வணிகர்களின் பேரமைப்பு சார்பில் போராட்டத்தை நடத்த அறிவிக்க இருக்கிறோம். 2016ம் ஆண்டு அகில இந்திய வியாபாரிகள் சங்க கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் படிப்படியாக ஜிஎஸ்டி வரியை குறைப்போம் என்று கூறினார். ஆனால், குறைக்கவில்லை. மாறாக, ஒவ்வொரு பொருளுக்கும் ஜிஎஸ்டி வரியை கூட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதை, எதிர்த்து எங்களது போராட்டம் நடைபெறும். இவ்வாறு, அவர் கூறினார்.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு