தமிழகத்தில் 14 நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜக போட்டி; பட்டியல் கொடுத்த அமித்ஷாவால் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி

சென்னை: தமிழகத்தில் பாஜக 14 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகவும் அதை ஒதுக்கும்படியும் எடப்பாடி பழனிச்சாமியிடம் கூறிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதற்கான பட்டியலை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த எடப்பாடி உடனடியாக சென்னை திரும்பி விட்டார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று காலையில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இரவில் சுமார் 30 நிமிடம், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது வீட்டில் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துப் பேசினார். டெல்லிக்கு செல்லும் திட்டம் இல்லாமல் இருந்த எடப்பாடி, அமித்ஷா அழைப்பின்பேரில்தான் டெல்லி சென்றார்.

இந்த சந்திப்பின்போது பாஜக தேர்தலை சந்திக்க தற்போது முழு ஆயத்தமாகிவிட்டது. அதனால் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிகளை பங்கீடு செய்து விரைவில் வேட்பாளர்களையும் அறிவித்து விட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கூட்டணியை இறுதி செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக, எடப்பாடி பழனிச்சாமியிடம் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை கொடுத்துள்ளார்.

அந்தப் பட்டியலில் 14 தொகுதிகள் இடம்பெற்று இருந்தன. அதில் தென்காசி தொகுதி, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, வேலூர் தொகுதி ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் தொகுதி பாரிவேந்தர், தஞ்சை அல்லது மேற்கு மாவட்டத்தில் ஈரோடு தொகுதி வாசனின் தமிழ் மாநில காங்கிரசுக்கும் ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளது. இவர்கள் 4 பேருமே பாஜகவின் சின்னத்தில் போட்டியிடுவார்கள். மீதம் உள்ள 10 தொகுதிகளில் பாஜக போட்டியிட முடிவு செய்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், நீலகிரி, தென்சென்னை, கடலூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட 10 தொகுதிகளில் போட்டியிடுவதாக கூறியுள்ளது. இதில் ஒரு தொகுதியைக் கூட குறைக்க முடியாது.

நாங்கள் தற்போது பல மடங்கு வளர்ந்துள்ளோம். ஆனால் அதிமுக 4 பிரிவுகளாக உடைந்துள்ளது. இதனால், 14 தொகுதி வேண்டும் என்று கூறியுள்ளார். விரைவில் கூட்டணிக்கான தொகுதியை அறிவிக்க நடவடிக்கை எடுங்கள் என்று கூறியுள்ளார்.இதைக் கேட்டதும் எடப்பாடி பழனிச்சாமி கடும் அதிர்ச்சி அடைந்தார். அதோடு, வருகிற 18ம் தேதி கூடும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் அனைத்து மசோதாக்களுக்கும் அதிமுக ஆதரவு தரவேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியோடு வெளியில் வந்த எடப்பாடி பழனிச்சாமி, நேற்று இரவே சென்னை திரும்பி விட்டார். தனித்து வரவேண்டும் என்று அமித்ஷா கூறியதால், அவர் மட்டுமே அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இதனால் அதிமுக நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

Related posts

விஷச் சாராயத்தில் 29.7% மெத்தனால் கலப்பு – அரசு அறிக்கை

நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது

பழைய குற்றால அருவியில் இரவு 8 மணி வரை குளிக்கலாம்