தமிழகத்தின் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணிக்கு கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிக்கு கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தல் முடிந்ததும், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு 39 தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி முடிந்ததும், ஜூன் 4ம் தேதி காலை 8 மணிக்கு நாடு முழுவதும் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்குகிறது. இதற்கான ஆயத்த பணிகளில் இந்திய தேர்தல் ஆணையமும், அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது: தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 39 மையங்களில், 43 கட்டிடங்களில் உள்ள 234 அறைகளில் நடைபெறுகிறது. ஒரு வாக்கு எண்ணிக்கை அறையில் 14 மேஜைகள் போடப்பட்டிருக்கும்.

வாக்காளர்கள் எண்ணிக்கை, பதிவான வாக்குகள் எண்ணிக்கை அடிப்படையில் தேவைப்படும் இடங்களில் கூடுதல் மேஜைகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று அமைக்கப்படும். தமிழகத்தில், அனைத்து மையங்களிலும் சேர்த்து வாக்கு எண்ணிக்கைக்காக 3,300 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணியில் 10 ஆயிரம் பணியாளர்கள், அவர்களுக்கு உதவியாக மின்னணு இயந்திரங்கள் எடுத்து வருதல் உள்ளிட்டவற்றுக்காக 24 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படுவார்கள். நுண் பார்வையாளர்களாக 4,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்றார்.

இந்நிலையில், தமிழகத்தில் 39 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிக்கு கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அரசிதழில் நேற்று வெளியிட்டது. அதன்படி, “பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் 5 முதல் 20 பேர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உதவியாக இருந்து பணிகளை மேற்கொள்வார்கள்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்