தமிழ் மடங்கள் தோன்றிய நோக்கம் நிறைவேற தமிழ், தமிழர்கள், தமிழ்நாடு காப்பாற்றப்பட வேண்டும்: தருமபுர ஆதீன கல்லூரி பவளவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

திருச்சி: தமிழ் மொழி, தமிழர்கள், தமிழ்நாடு காப்பாற்றப்பட்டால்தான், தமிழ் மடங்கள் எந்த நோக்கத்துக்காக 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறும் என்று தருமபுர ஆதீன கல்லூரி பவளவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று காலை விமானத்தில் புறப்பட்டு 11.20 மணிக்கு திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவசங்கர் மற்றும் அதிகாரிகள், திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கார் மூலமாக மயிலாடுதுறை சென்றார். அங்கு தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி 75ம் ஆண்டு பவள விழா நிறைவை முன்னிட்டு, நேற்று நடந்த முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது தருமபுர ஆதீன ஒலி, ஒளி பதிவக தொலைக்காட்சி, வானொலி பதிவகத்தை திறந்து வைத்து, பவளவிழா மலர் மற்றும் திருக்குறள் ஆதீன உரை விளக்க நூலை வெளியிட்டார்.

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 1946ம் ஆண்டு கல்லூரி தொடங்கி 1972ல் நடந்த வெள்ளி விழாவில் அப்போதை முதல்வர் கலைஞர் கலந்து கொண்டார். பொன் விழாவில் பேராசிரியர் அன்பழகன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த பவள விழாவில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தருமபுர ஆதீன கல்லூரியின் பவள விழா நடைபெறும் வேளையில் திமுகவின் பவள விழா செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த நிதியாண்டில் மட்டும் 5078 திருக்கோயில்களில் திருப்பணிகள் என இந்து சமய அறநிலையத் துறையைக் காத்து வரும் ஆட்சி தான் திமுக ஆட்சி.

இதனை மக்கள் அறிந்து வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். நீதிபதிகளே அறநிலையத் துறைக்கு நாம் ஆற்றும் பணிகளைப் பார்த்து, வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். “முதலமைச்சரின் செயல்பாடுகள் ஆட்சிக்கு மட்டுமல்ல, திருக்கோவில்களின் விடியலுக்கும் வழிகாட்டியாக உள்ளது\\” என்று பல்வேறு மடாதிபதிகள் வெளிப்படையாக பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் அரசாக நமது அரசு செயல்பட்டு வருகிறது. தருமபுரம் ஆதீனம் போன்ற நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் விரும்பும் குருமகா சந்நிதானங்களும் – தமிழ்நாட்டு மக்களும் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பதே எங்களுக்கு போதுமானது. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும், பண்பாட்டுக்கும் ஆபத்து வரும் போதெல்லாம் ஆன்மிகப் பெரியவர்களும் அதற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்கள். போராடி இருக்கிறார்கள்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம், தமிழ்காக்கும் போராட்டம், சமூக சீர்திருத்த இயக்கம் உள்ளிட்ட அனைத்திலும் இனம் – மொழி – நாட்டு உரிமை காக்க ஆன்மிக ஆளுமைகள் தனது பங்களிப்பை கடந்த 100 ஆண்டுகளாகச் செலுத்தியதைப் போல இன்றைய ஆன்மிக ஆளுமைகளும் பங்களிக்க வேண்டும். தமிழ் மொழி காப்பாற்றப்பட வேண்டும். தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும். தமிழ்நாடு என்ற மாநிலம் காப்பாற்றப்பட வேண்டும் – இந்த மூன்றும் காப்பாற்றப்பட்டால்தான், இதுபோன்ற தமிழ் மடங்கள் எந்த நோக்கத்துக்காக 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறும்.

இங்குள்ள மாணவர்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம், கல்வியில் மிக மிக உயரங்களை நீங்கள் அடைய வேண்டும். சந்திரயான்-3 விண்கலம் நிலாவில் தரையிறங்கிருப்பதன் மூலமாக, நமது இந்திய நாட்டை உலகமே வியப்போடு திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இந்தச் சாதனைக்கு பின்னால், சந்திரயான்-3 விண்கல பயணத்தின் திட்ட இயக்குநராக இருப்பவர், நமது தமிழ்நாட்டின் விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல். அரசுப் பள்ளி ஒன்றில் படித்து இன்று இந்தளவுக்கு உயர்ந்திருக்கிறார். அவர் போன்ற அறிவியலாளர்களை, கல்வியில் எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்.

பல்வேறு துறைகளில் நீங்கள் சாதனைகள் படைக்க வேண்டும். அனைவரும் தமிழ்த்தாயின் பிள்ளைகள் என்ற நோக்கத்தோடு – செயல்படுவதற்கான உணர்வை அனைவரும் பெற வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். உங்களின் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் எங்களிடம் தயங்காமல் சொல்லுங்கள். நிறைவேற்றித் தரத் தயாராக இருக்கிறோம். இது எனது அரசல்ல, நமது அரசு. மீண்டும் சொல்லுகிறேன். இது எனது அரசல்ல, நமது அரசு. இவ்வாறு முதல்வர் பேசினார்.

Related posts

மொரீசியஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு!

ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை!

பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!