தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி: காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் பகவத் சிங் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது மெரினாவில் திருவள்ளுவர் சிலை அருகே டிசம்பர் 20ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். கடந்த முறை இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக்கேட்ட நீதிமன்றம், வேறு எந்த மாதிரியான போராட்டத்திற்கு எந்த இடத்தில் அனுமதிக்கப்படும் என்று காவல்துறை விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டம் -ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரச்னைகளை கருத்தில் கொண்டே அனுமதி மறுத்ததாகவும், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பிப்ரவரி 27ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்கலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே கலந்துகொள்ள இருப்பதால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை எதுவும் ஏற்படாது என்று உறுதி அளிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் கேட்பதில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்பதால், வழக்கமான நிபந்தனைகளுடன் உண்ணாவிரத போராட்டத்திற்கு பிப். 28 முதல் அனுமதி வழங்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 6க்கு தள்ளிவைத்தார்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: தவெக தலைவர் விஜய்

ஹத்ராஸ் நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சாமியாரின் உதவியாளர் கைது

திருச்சி மாவட்டம் பாடாலூர் அருகே இன்று அதிகாலை விபத்து: காரில் பயணித்த பெண் பலி