‘பாசிச பா.ஜ.க. ஒழிக’: விமானத்தில் தமிழிசைக்கு எதிராக முழக்கம் எழுப்பிய தூத்துக்குடி சோபியா மீதான வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட் கிளை..!!

மதுரை: பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட சோபியா மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பா.ஜ.க. மாநில தலைவராக தமிழிசை பதவி வகித்தபோது 2018-ல் சென்னையில் இருந்து தூத்துக்குடி விமானத்தில் பயணம் செய்திருந்தார். தமிழிசை பயணம் செய்த அதே விமானத்தில் மாணவி லூயிஸ் சோபியா என்பவர் பயணித்தார். ஒன்றிய அரசின் அதிருப்தியால் விமானத்தில் தமிழிசை சவுந்தரராஜன் முன் பா.ஜ.க.வுக்கு எதிராக ‘பாசிச பா.ஜ.க. ஒழிக’ என்று லூயிஸ் சோபியா முழக்கமிட்டார்.

தொடர்ந்து விமானத்தில் முழக்கம் எழுப்பிய சோபியா மீது தூத்துக்குடியில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மாணவி சோபியா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீண்ட விசாரணையில் இருந்து வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். அதனால் அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இதனிடையே இந்த வழக்கில் தன்னை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு நீண்ட விசாரணை நடைபெற்றிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதி தனபால் முன்பு இறுதிக்கட்ட விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்புநீதி ஆஜராகி வாதிட்டார். அப்போது, தூத்துக்குடி காவல்துறையினர் இந்த மாணவி மீது போடப்பட்ட வழக்கு என்பது சென்னை சிட்டி காவல்துறையினர் பயன்படுத்தக்கூடிய பிரிவை பயன்படுத்தியுள்ளனர்.

இந்த பிரிவை கோவை, மதுரை போன்ற காவல்துறையினர் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த பிரிவை பயன்படுத்துவதற்கு தூத்துக்குடி காவல்துறையினருக்கு அனுமதி கிடையாது. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மாணவி சோபியா மீது வழக்கு பதியப்பட்ட சட்டப்பிரிவு பொருத்தமானது அல்ல என்று விளக்கம் அளித்து வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.

Related posts

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி