தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் கூடுதல் பொறுப்பு

* ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு
* இன்று பதவி ஏற்பு

சென்னை: தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்ததை அடுத்து ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் பொறுப்பை கூடுதலாக வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு பாஜ தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த 2019 செப்டம்பரில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு தெலங்கானா ஆளுநர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் 2021ல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் தனது ஆளுநர் பதவிகளை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை குடியரசுத்தலைவருக்கு அனுப்பிவைத்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, ஜார்கண்ட் ஆளுநராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பாக தெலங்கானா ஆளுநர் பதவியையும், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியையும் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதனால் இன்று, தெலங்கானா ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்கிறார். புதுச்சேரி துணை நிலை ஆளுநராக வெள்ளிக்கிழமை அவர் பதவியேற்கிறார்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!