தமிழகத்தில் 17ம் தேதி வரை வெப்பம் அதிகரிக்கும் மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 17ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். மேலும், அடுத்த 5 நாட்களுக்கு சில இடங்களில் படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சிநிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது.

ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. சில இடங்களில் பலத்த காற்று, இடி மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரியில் 70 மிமீ வரை பெய்துள்ளது. இந்நிலையில், வளி மண்டல மேலடுக்கு தொடர்ந்து நீடித்து வருவதால் 17ம் தேதி வரையில் ஓரிரு இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்யும் வாய்ப்புள்ளது.

மேலும், வட தமிழக உள்வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், தென் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், வடதமிழக கடலோர பகுதிகள், தென் தமிழக கடலோர பகுதிகளில் சராசரியாக 100 டிகிரி வரை வெயில் நிலவியது. சென்னை மீனம்பாக்கத்தில் இயல்பைவிட 1.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடுதலாக பதிவாகியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக 15ம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மாலையில், இரவில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா பகுதிகள், குமரிக் கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related posts

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்!

திருப்பதி மலைப்பாதையில் 7 யானைகள் நடமாட்டம்

நடுவழியில் பஸ்சை நிறுத்திவிட்டு போதையில் படுத்து தூங்கிய கண்டக்டர் அதிரடி சஸ்பெண்ட்